இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவது தடுக்கப்படும்: ரணில் உறுதி

தினகரன்  தினகரன்
இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவது தடுக்கப்படும்: ரணில் உறுதி

கொழும்பு: ‘‘இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில்  கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில்  மனித குண்டு தீவிரவாதிகள் 9 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், 260 பேர்  பலியாயினர். ஐஎஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில், இலங்கையில் உள்ள தேசிய தவுஹீத் ஜமாத் அமைப்பு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் சிவில் சொசைட்டி பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், ரணில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதோடு இந்த தீவிரவாதம் முடிந்துவிட்டது என அர்த்தம் அல்ல. இலங்கையில் மீண்டும் ஐ.எஸ் தீவிரவாதம் தலைதூக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள ேவண்டும். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலை பாதுகாப்பு படைகள் தடுக்க தவறியது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் செயல்பாடுகளுக்கு இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்த நிலையை அப்படியே பராமரிக்க வேண்டும். மத தீவிரவாதத்தை மக்கள் ஆதரிக்கக் கூடாது. ஐ.எஸ் தீவிரவாதம் இலங்கையில் மீண்டும் தலை தூக்காத வகையில் நெறிமுறைகள் வகுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை