வந்தே விட்டது வர்த்தகப்போர்; நடக்கப்போவது என்ன

தினமலர்  தினமலர்

பலசுற்று பேச்சுவார்த்தை நடந்தும் அமெரிக்காவும், சீனாவும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் உலகம் வர்த்தகப்போரை சந்தித்துள்ளது.அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடிகளை எடுத்து வருகிறார். தொழிலதிபரான அவர் ஏற்கனவே சீன பொருட்கள் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது சீன இறக்குமதிக்கு முடிவு கட்டப்படும் என கூறி வந்தார். அதிபரானதும் அதிரடிகளை துவங்கினார்.சர்வதேச பேடன்ட் விதிமுறைகளை மீறுவதாக கூறி 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு சீன இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை அதிகரித்து கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டார். பதிலடியாக 110 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனாவும் வரிகளை உயர்த்தியது.இது வெறும் டிரெய்லர் தான்... அடுத்தடுத்து வரி உயர்வுகள், இறக்குமதி தடைகள் வரும் என சீனாவை வெளிப்படையாக எச்சரித்தார், டிரம்ப்.இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது சீனா. இரு தரப்பு அதிகாரிகளும் பல சுற்று பேச்சு நடத்தினர். அப்போது 2019 ஜனவரி முதல்தேதி வரை பிற வரி உயர்வுகளை ஒத்திவைப்பதாக இரு தரப்பும் அறிவித்தன. ஆனால் அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளில் சுமுக தீர்வு கிடைக்காததால் இறக்குமதி பொருட்களுக்கான வரியை பலமடங்கு அதிகரித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.வளர்ச்சியில் சரிவுதற்போதைய நிலையில் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டுக்குப்பிறகு மிக குறைவாக 6.5 சதவீத வளர்ச்சி மட்டுமே பெற்றுள்ளது. உள்நாட்டு பற்றாக்குறையும் ேவகமாக அதிகரித்து 2.5 டிரில்லியன் டாலர்கள் என்ற நிலையில் உள்ளது. சீன பங்குச்சந்தை கடந்த ஆண்டு 28 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. வாகனத்துறை 16 சதவீதம் வீழ்ந்தது. ரியல்எஸ்டேட் துறை பலத்த அடி வாங்கியுள்ளதால், மிக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.அதே சமயம் அமெரிக்க வளர்ச்சி 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது மட்டுமின்றி வேலையின்மை புள்ளி விபரமும் பல ஆண்டுகளுக்குப்பிறகு மிகவும் குறைந்துள்ளது.நடக்கப்போவது என்னகடந்த ஆண்டு வரி உயர்வு அறிவிக்கப்பட்டதும், இந்த பிரச்னை இரு நாடுகளுடன் நிற்கப்போவதில்லை, உலகம் முழுதும் எதிரொலிக்கும், குறிப்பாக வளரும் நாடுகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.) எச்சரித்தது.ஆனால் இதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. டிரம்பின் நடவடிக்கைகளுக்கு அங்குள்ள சிறு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தாலும் பெரிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.தங்கள் தொழிற்சாலைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற தயாராகி வருகின்றன. பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான, 'ஹார்லி-டேவிட்சன்' தங்கள் நிறுவனத்தை ஐரோப்பிய யூனியனுக்கு மாற்ற உள்ளனர்.நிதி நிபுணர்கள் எச்சரிக்கைவர்த்தக போர் இருபுறமும் கூரான வாள் என நிதி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடப்பாண்டு சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் குறையும், உலக பொருளாதாரம் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பது அவர்கள் கணிப்பு.நாட்டிசிஸ் நிதி ஆய்வு நிறுவன தலைவர் எஸ்டி ட்வக் கூறுகையில், இப்போதுள்ள நிலையில் 2019 பின்பாதியில் துவங்கும் பொருளாதார தேக்க நிலை 2021 கடந்தும் நீடிக்கலாம். உலக நாடுகள் தங்களுக்குள் வர்த்தக பிரச்னைகளை தவிர்ப்பது நல்லது, என்றார். எஸ் அண்டு பி நிதி ஆய்வு நிறுவனம் கூறும்போது, துவக்கத்தில் இந்த வர்த்தகப்போரின் பாதிப்பு இரு தரப்பிற்கும் தெரியப்போவதில்லை. இரு நாடுகளுமே சமாளிக்கும் சக்தியை பெற்றுள்ளன. ஆனால், ஓராண்டுக்குப்பின் பார்க்கும்போது பாதிப்பு மிகமிக அதிகமாக இருக்கும். அதிலிருந்து மீண்டு வர மேலும் 2 ஆண்டுகள் ஆகும், என எச்சரித்துள்ளது.மொத்தத்தில் இரு பெரிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள மோதல் சிறிய மற்றும் வளரும் நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.அடுத்த மாதம் சந்திப்புஜூன் இறுதியில் ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி--20 நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் டிரம்பும், சீன அதிபர் ஜீஜின்பிங்கும் சந்தித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நேரில் சந்தித்து பேசினால் வர்த்தக போருக்கு தீர்வு ஏற்படலாம் என உலகம் நம்புகிறது. ஆனால் இரு தரப்பிலும் இது குறித்து உறுதியளிக்கப்படவில்லை.பெயர் மாறும் சீன நிறுவனங்கள்சீனாவிற்கு அமெரிக்காவை அடுத்த மிகப்பெரிய நுகர்வோர் சந்தை இந்தியா. ஆனால் சீன அரசின் பாக்., ஆதரவு செயல்பாடுகள் இந்தியாவில் அதன்மீது அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும் மோடி அரசு அமைந்தபின் பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை அமைத்துள்ளன. ஜியோமி போன்ற அலைபேசி நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிப்புகளை துவங்கியுள்ளன.'மேட் இன் சைனா' என இருந்தால் அதை விற்பதில் சிரமம் இருப்பதாக வியாபாரிகள் கூறியதையடுத்து சீன தயாரிப்புகள் தமது அடையாளங்களை மாற்றி வருகின்றன. இந்திய பெயர்கள் போன்று 'மேத்தா', 'வருணி', போன்ற பெயர்களில் உதிரி பாகங்களை விற்பனைக்கு அனுப்புகின்றன. இவற்றில் 'மேட் இன் சைனா' என்பதற்கு பதில் 'மேட் இன் பி.ஆர்.சி.' என இருக்கும். அதாவது பீப்பிள்ஸ் ரிபப்பளிக் ஆப் சைனா என்பதன் சுருக்கம்.அந்தர் பல்டி ஏன்மசூர் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் சீனா தொடர்ந்து இடையூறு செய்து வந்தது. தேவையற்ற காரணங்களை கூறி தடை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென்று தனது நிலையை மாற்றி அந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது. இதன் பின்னணியில் பல ராஜதந்திர விஷயங்கள் இருந்தாலும் வர்த்தக காரணங்களும் கூறப்படுகின்றன. அமெரிக்காவுடன் வர்த்தக போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவையும் பகைத்துக்கொள்ள பெய்ஜிங் விரும்பவில்லை. ஏற்கனவே பொருளாதாரம் சிக்கலில் உள்ள நிலையில் மசூத் அசாருக்காக இந்திய சந்தையையும் இழப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்தநாட்டின் பொருளாதார நிபுணர்கள் கூறியதே சீனாவின் நிலைப்பாடு மாறியதற்கு முக்கிய காரணம் என சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.முந்திச்சொன்ன வாழ்த்துதேர்தல் முடிவுகள் வந்து, மோடி தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவானபோது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதலில் வாழ்த்துக்கூறினார். தொடர்ந்து சீன அதிபர் ஜீஜின்பிங் வாழ்த்து கூறினார். அந்த அளவிற்கு இந்திய தேர்தல் முடிவை சீனா தொடர்ந்து கண்காணித்து வந்தது.அடுத்த 5 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மோடி இருப்பதால் வர்த்தக சரிவை தவிர்க்கவே ஜீஜின்பிங் இவ்வாறு செய்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில் அண்மையில் தொலைக்காட்சியில் சீன அதிபர் ஜீஜின்பிங் பேசினார். அப்போது வர்த்தக போர் குறித்து நேரடியாக பேசாமல், மாசே துங் துவங்கிய பயணம் பல ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும் இன்றைய சோதனை சூழலை கடந்து நாம் செல்ல வேண்டிய துாரம் அதிகம் என பேசினார்.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்படி ஒரே நபர் இரு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது. தற்போது அதில் திருத்தம் செய்து ஜீஜின்பிங் அதிபராக தொடர்வது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை