பிரிட்டன் புதிய பிரதமர் யார்? எட்டு பேர் கடும் போட்டி

தினமலர்  தினமலர்

லண்டன்:பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து, தெரசா மே விலகவுள்ளதை அடுத்து, புதிய பிரதமராவதற்காக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த, எட்டு பேர், கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பிரிட்டன் நாடு, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலக, 2016ல், முடிவு எடுத்தது. ஐரோப்பிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால், பிரிட்டன், தன் தனித்தன்மையை இழந்து விட்டதாக, அந்நாட்டு மக்கள் கருதினர்.இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக, அந்த நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இதற்கான, 'பிரெக்சிட்' தீர்மானத்தை, ஆளும் கட்சி, பிரிட்டன் பார்லிமென்டில் நிறைவேற்ற முயற்சித்து, தொடர் தோல்வியை சந்தித்தது.பிரதமரும், ஆளும் கட்சி தலைவருமான, தெரசா மேக்கு, கடும் நெருக்கடி எழுந்தது. அவரது கட்சியினரே, போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகஉள்ளதாக, தெரசா மே, சமீபத்தில் அறிவித்தார். பிரதமர் பதவிலிருந்தும், விரைவில், அவர் விலக உள்ளார்.இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு, அந்த கட்சியைச் சேர்ந்த எட்டு மூத்த தலைவர்கள், கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளனர்.பிரிட்டனின், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர், போரிஸ் ஜான்சன் பெயர், இதில், முதலில் உள்ளது. இது தவிர ஏழு பேரும் போட்டியில் உள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரோ, பிரதமராக பதவியேற்பார்.

மூலக்கதை