பேச்சு நடத்த தயார்: பாக்., அறிவிப்பு

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்:''அனைத்து பிரச்னைகள் குறித்தும், புதிதாக அமையும் இந்திய அரசுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்,'' என, அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமான நிலையில் உள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரின், புல்வாமாவில், பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 பேர் கொல்லப்பட்டனர்.அதைத் தொடர்ந்து, பாக்., எல்லைக்குள் சென்று, அங்குள்ள பயங்கரவாதிகள் முகாம்களை, நமது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.வாய்ப்புஇந்த நிலையில், 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, அரசு மீண்டும் அமைந்தால்தான், இரு தரப்பு பேச்சு நடந்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு ஏற்படும்' என, இந்தாண்டு ஏப்ரலில், அந்நாட்டு பிரதமர், இம்ரான் கான் கூறியிருந்தார்.தற்போது, லோக்சபாவுக்கு தேர்தல் முடிந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைய உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார்.சந்திப்புஅதே நாளில், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நடந்த, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், நமது வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜை, பாக்., வெளியுறவு அமைச்சர், குரேஷி சந்தித்தார். 'பேச்சு மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்வரவேண்டும்' என, அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் முல்தானில் நடந்த, ஒரு நிகழ்ச்சியில், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி பேசியதாவது:இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம். இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவவும், இரு நாடுகளும் வளர்ச்சியின் பாதையில் செல்வதற்கும், இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை