பயங்கரவாதத்தை ஒழிப்போம் ரணில் விக்ரமசிங்கே சூளுரை

தினமலர்  தினமலர்

கொழும்பு:''பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க, பாதுகாப்பு படையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள், இதற்கு ஒத்துழைக்க வேண்டும். மதவாதிகள் மற்றும் பழமைவாதிகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது,'' என, இலங்கை பிரதமர், ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
அண்டை நாடான, இலங்கையில், கடந்த மாதம், தேவாலாயம், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட, எட்டு இடங்களில், பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த தாக்குதலுக்கு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்., பொறுப்பேற்றது. இந்நிலையில், பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து, பொதுநல அமைப்புகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், இலங்கை பிரதமர், ரணில் விக்ரமசிங்கே, நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது:பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க, பாதுகாப்பு படையினர், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பயங்கரவாதம், நாட்டில், மீண்டும் தலை துாக்கி விடக் கூடாது. நாட்டு மக்கள், பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மதவாத அமைப்புகள் மற்றும் பழமைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை கைவிட வேண்டும். கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியது குறித்து, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்து, விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு, ரணில் பேசினார்.

மூலக்கதை