6 ஆண்டு கழித்து கிரெடிட் கார்டு பணம் வசூல் வங்கிக்கு 52,000 அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
6 ஆண்டு கழித்து கிரெடிட் கார்டு பணம் வசூல் வங்கிக்கு 52,000 அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடன் தொகையை அடைத்த பிறகும், 6 ஆண்டு கழித்து கிரெடிட் கார்டுக்கு பணம் வசூலித்த வங்கிக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் ₹52 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. சென்னை, திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் முகபூர் ரஹ்மான். இவர் பாலவாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். மேலும் 3 கிெரடிட் கார்ட் (கடன் அட்டை) உபயோகித்து வந்துள்ளார். இந்தநிலையில், தனக்கு  ஏற்பட்ட பணம் கஷ்டம் காரணமாக முகபூர் கடந்த 2009ம் ஆண்டு பணம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் பாலவாக்கத்தில் உள்ள வங்கியில் பேசி, கிரடிட் கார்டு மூலம் செலவு செய்த ₹89 ஆயிரத்தை  22 ஆயிரத்து 250 என 4 தவணையாக  செலுத்தினார். இதேபோல் மற்றொரு கார்டில் வாங்கிய ₹38 ஆயிரம் பணத்தையும் 2 தவணையாக செலுத்தி 2010ம் ஆண்டில் நிலுவை முழுவதும் செலுத்தியுள்ளார். இந்தநிலையில் கடந்த 2016ல் முகபூரின் வங்கி கணக்கில் ₹37 ஆயிரத்து 541 பிடித்தம் செய்துள்ளனர். இதுகுறித்து வங்கியிடன் கேட்டபோது கிெரடிட் கார்டு கடனுக்காக பிடித்தம் செய்ததாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வங்கிக்கு  முகபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். பதில் வராததால், இதுதொடர்பாக சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதி ஜஸ்டின் டேவிட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 6 வருடம் கழித்து பணம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2010ம் ஆண்டே அனைத்து பணத்தை செலுத்தியுள்ளார். எனவே, முகபூரிடம்  இருந்து பிடித்தம் செய்த ₹37,541, மன உளைச்சலுக்கு 15 ஆயிரம் என மொத்தம் ₹52,541 திருப்பி வழங்க உத்தரவிட்டார்.

மூலக்கதை