இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும்: மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான்கான் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
இந்தியா  பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும்: மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான்கான் வலியுறுத்தல்

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த  மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 90 இடங்களிலும்,  மற்றவை 102 இடங்களிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு  மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டம் முடிந்தவுடன், டெல்லி ராஜபவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோரினார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றிப்பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடித்தை அடித்து, ஆட்சியமைக்க கோரினார்.  தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக  பதவியேற்கின்றார்.இதற்கிடையே, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என தொலைபேசியில் தொடர்புகொண்டும், டுவிட்டரிலும் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். இதன்படி, தனிப்பெருன்பான்மையுடன் 303 இடங்களில் பாஜக வெற்றிப்பெற்றதுடன், மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறினார். தெற்கு ஆசியாவின் அமைதி, வளர்ச்சி  மற்றும் வளத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன் என தனது டுவிட்டரில் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு விழாவில் பேசிய இம்ரான் கான்,  காஷ்மீர் விவகாரங்கள் தீர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என இம்ரான்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியா - பாகிஸ்தான்  இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை