சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கியது கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள் மாயம்?

தினகரன்  தினகரன்
சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கியது கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள் மாயம்?

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கிலோ கணக்கில் பாதுகாப்பு அறையில் இருந்து மாயமானதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமின்றி தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வழங்குவது உண்டு. இவ்வாறு காணிக்கையாக கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்கள் ஆரன்முளா கோயிலை ஒட்டியுள்ள, திருவிதாங்கூர் தேவஸம்போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். இந்த பாதுகாப்பு அறை, தேவஸம்போர்டு உதவி கணக்கு அதிகாரியின் தலைமையிலான 3 அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளது. 3 அதிகாரிகளின் முன்னிலையில்தான் அறையில் இருந்து பொருட்களை வைக்கவோ, எடுக்கவோ முடியும். ஒரு அதிகாரி இல்லாவிட்டால் கூட அறையை திறக்க கூடாது. வருடந்தோறும் இந்த பாதுகாப்பு அறையில் உள்ள ெபாருட்கள் தணிக்கை செய்யப்படும்.இந்நிலையில் இந்த அறையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமானதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆரன்முளா பாதுகாப்பு அறைக்கு சென்று ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது கடந்த சில வருடங்களாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்த கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரியவந்தது. இதுதொடர்பாக லஞ்சஒழிப்பு அதிகாரிகள் ஒரு அறிக்கை தயாரித்து கேரளா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதை பரிசீலித்த உயர் நீதிமன்றம் பாதுகாப்பு அறையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து உடனடியாக ஆய்வு செய்ய தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது .இதை தெடர்ந்து நாளை தேவஸம்போர்டு கணக்கு தணிக்கை துறை அதிகாரிகள் பாதுகாப்பு அறைக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.அமைச்சர் விளக்கம் அளிக்கவேண்டும்பாஜ மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலையில் கடந்த 2017 முதல் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 40 கிலோ தங்கம் மற்றும் 100 கிலோ வெள்ளி காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளியை பாதுகாப்பு அறையில் வைப்பது தொடர்பாக எந்த ஆவணமும் இல்ைல என்று கூறப்படுகிறது. பலகோடி மதிப்புள்ள இவை எங்கு மாயமானது என்று அறிய பக்தர்களுக்கு உரிமை உண்டு. பாதுகாப்பு அறையை திறந்து ஆய்வு செய்வதற்கு முன் இந்த சம்பவம் தொடர்பாக தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

மூலக்கதை