தங்கத்தில் முதலீடு: இந்தியா நம்பர்-1

தினமலர்  தினமலர்
தங்கத்தில் முதலீடு: இந்தியா நம்பர்1

துபாய்: மத்திய கிழக்கு நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், தங்கம் முதலீட்டில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அரசின் உரிமை பெற்றே, துபாயில், தங்கம் தொழிலில் நிறுவனங்கள் ஈடுபட முடியும்.அந்த வகையில், துபாயில், 4,086 நிறுவனங்கள், தங்கம் துறையில் ஈடுபட லைசென்ஸ் பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, பொருளாதார மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: துபாயில், 4,086 நிறுவனங்கள், தங்கம் துறையில் ஈடுபட்டுள்ளன. தங்க ஆபரணம், வைரம் உள்ளிட்ட விலை மதிப்பில்லா கற்கள், வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பில், இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில், 60 ஆயிரத்து, 125 பேர் முதலீடு செய்துள்ளனர். அதிக அளவு முதலீடு செய்துள்ள நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், பாகிஸ்தான், பிரிட்டன், சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து, ஓமன், ஜோர்டான், பெல்ஜியம், ஏமன், கனடா உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை