நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களில் அபார வெற்றி: 30-ம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் நரேந்திர மோடி

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களில் அபார வெற்றி: 30ம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் நரேந்திர மோடி

டெல்லி: வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை  பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம்  டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதிவிக்கு நரேந்திர மோடியை முதலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்மொழிந்தார். தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ,  சிவசேனா தலைவர் உத்தல் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.கூட்டம் முடிந்தவுடன், டெல்லி ராஜபவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோரினார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில்  வெற்றிப்பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடித்தை அடித்து, ஆட்சியமைக்க கோரினார். தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக  பதவியேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, பதவியேற்பு விழாவில் சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அந்த  விழாவைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழாவை  நடத்த முடிவு செய்துள்ளதால், இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகளுக்கு உணர்த்தும் விதமாக, பதவியேற்பு விழாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள்  பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனால், பதவியேற்பு விழாவை அவசரகதியில் நடத்தி முடிக்க மோடி விரும்பவில்லை. உலக தலைவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜப்பான் பிரதமர் அபே ஷின்சோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஜெர்மன் சான்சலர்  ஆங்கெலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன், அபுதாபி மன்னர் உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உறுதிகொடுத்துள்ளனர்.அதேபோல், சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவுக்கு வரும் தேதியை தீர்மானிப்பதில் இழுபறி நீடிப்பதால், பதவியேற்பு விழா தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு டெல்லி  ராஜபவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டின் 17-வது பிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார். மேலும், மோடி தலைமையிலான மத்திய  அமைச்சரவையில் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.  இதற்கிடையே, முந்தைய மத்திய அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்கள், 11 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), 34 இணை அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அமையவுள்ள அமைச்சரவையில் அமைச்சரவையில் சில  முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. கூட்டணி கட்சியினருக்கும் சில இலாகா ஒதுக்கப்பட்டு அமைச்சர் பதவி வழங்க பாஜ தலைமை முடிவு செய்துள்ளது. பாஜ பொறுத்தவரை தேசிய தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும்,  உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் வெளியுறவு அமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராக இருந்து சுஷ்மா சுவராஜ், உடல்நிலை  காரணத்தால் ஓய்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலை அமேதியில் வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கு, தற்போதைய அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்பட உள்ளது. மேலும் தற்போதைய  அமைச்சரவையில் உள்ள நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.

மூலக்கதை