நெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெருக்கடியால் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மனைவி தடுத்து நிறுத்தம்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் வெளிநாடு செல்லமுடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில மாத காலமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

கடன்சுமை, குத்தகை மற்றும் சம்பள பாக்கி போன்ற நிதிப் பிரச்னைகள் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு பலமாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ஜெட் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயலும் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் செல்வதற்காக மும்பை விமானநிலையத்துக்கு சென்றனர்.

ஆனால், அவர்கள் இருவரும் விமானநிலையத்திலேயே சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

முன்னதாக அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறிவிட்டனர்.
விமானம் கிளம்பத் தயாரானபோது, திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர், தம்பதியர் இருவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.

‘நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டியது மீதமிருப்பதன் காரணமாக அவர்கள் வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்’ என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள், வெளிநாடு தப்பி விடாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை