வெனிசுலாவில் பயங்கரம் சிறை கலவரத்தில் 29 கைதிகள் பலி

தினகரன்  தினகரன்
வெனிசுலாவில் பயங்கரம் சிறை கலவரத்தில் 29 கைதிகள் பலி

கரகஸ்: வெனிசுலா சிறை கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். வெனிசுலா நாட்டின் போர்ச்சுகீசா மாகாணத்தில் உள்ள அகரிகுவா சிறையில் 60 கைதிகள் மட்டுமே அடைக்கக் கூடிய இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு இருந்தனர். இதனால் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி  பாதிக்கப்பட்ட கைதிகள், சில நாட்களுக்கு முன்  பார்வையாளர்கள் சிலரை பிணையக் கைதிகளாக சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து அவர்களை மீட்க சென்ற போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கைதிகள் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி தாக்குதல் தொடுத்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 29 கைதிகள்  உயிரிழந்தனர். 19 போலீசார் காயமடைந்தனர். இதில் கலவரத்திற்கு தலைமை தாங்கிய வில்பிரடோ ராமோஸ் என்ற கைதியும் உயிரிழந்தான். இது குறித்து அந்நாட்டில் செயல்படும் என்ஜிஓ நிறுவனம் ஒன்று கூறுகையில், `வெனிசுலாவில் உள்ள 500 சிறைகளில் 8 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். ஆனால், அதற்கு மாறாக 55 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதனால், அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. போதிய உணவும், வேறு சிறைகளுக்கு மாற்றவும் கோரிய அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் அவர்கள்  பார்வையாளர்களை பிணையக் கைதிகளாக சிறைப்பிடித்திருக்க கூடும்’ என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை