போல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்

தினகரன்  தினகரன்
போல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அசத்தல்

லண்டன்: இந்திய அணியுடனான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் தலா 2 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே கே.எல்.ராகுல் 6 ரன் எடுத்து போல்ட் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கேப்டன் விராத் கோஹ்லி 18 ரன் எடுத்து கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்திக் பாண்டியா 30 ரன்னில் (37 பந்து, 6 பவுண்டரி) வெளியேற, தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நிதானமாக விளையாடிய டோனி 17 ரன் எடுத்து (42 பந்து, 1 பவுண்டரி) சவுத்தீ வேகத்தில் நீஷம் வசம் பிடிபட, இந்தியா 22.3 ஓவரில் 91 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. புவனேஷ்வர் குமார் 17 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா - குல்தீப் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது. ஜடேஜா 54 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குல்தீப் 19 ரன் (36 பந்து, 2 பவுண்டரி) எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 39.2 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட் (6.2-1-33-4), நீஷம் 3 விக்கெட் (6-1-26-3), சவுத்தீ, கிராண்ட்ஹோம், பெர்குசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 37 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. கோலின் மன்றோ 4, கப்தில் 22 ரன்னில் வெளியேறினர். கேப்டன் கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 114 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். வில்லியம்சன் 67 ரன் (87 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), டெய்லர் 71 ரன் (75 பந்து, 8 பவுண்டரி) விளாசி விக்கெட்டை இழந்தனர். நியூசிலாந்து 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து எளிதாக வென்றது. நிகோல்ஸ் 15 ரன், பிளண்டெல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா (4-2-2-1), ஹர்திக், சாஹல், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் 28ம் தேதி வங்கதேசத்தை சந்திக்கிறது.

மூலக்கதை