9 எம்பி.க்கள் மட்டுமே வென்றதால் கோபத்தின் உச்சியில் கேசிஆர்: சூளுரைத்த அமைச்சர்கள் கலக்கம்

தினகரன்  தினகரன்
9 எம்பி.க்கள் மட்டுமே வென்றதால் கோபத்தின் உச்சியில் கேசிஆர்: சூளுரைத்த அமைச்சர்கள் கலக்கம்

ஐதராபாத்: ‘உங்கள் காலடியில் 16 எம்பி.க்களின் வெற்றியை சமர்பிப்போம்’ என்று சூளுரைத்து விட்டு சென்ற மூத்த அமைச்சர்களுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ‘செம டோஸ்’ விட்டார். 2 அமைச்சர்கள் பதவி பறிக்கவும்  திட்டமிட்டுள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே தெலங்கானா மாநில சட்டசபைக்கு தேர்தலை நடத்தி வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானவர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்). பின்னர், மக்களவை தேர்தலில் தீவிர கவனம் செலுத்தினார். தனது தெலங்கானா  ராஷ்டிரிய சமிதியின் (டிஆர்எஸ்) குரல்தான் டெல்லியில் ஒலிக்க வேண்டும்; மோடியே தன்னை கூப்பிட வேண்டும் என்று மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருந்த அவர் நினைப்பிலும் மண்ணை போட்டது பாஜ.வின் பிரமாண்ட வெற்றி. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில் 9 இடங்களை மட்டுமே டிஆர்எஸ்.சால் பெற முடிந்தது. பாஜ.வுக்கு 4, காங்கிரசுக்கு 3 இடங்கள் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. எல்லா  இடங்களையும் பிடித்து, மோடிக்கு ஆதரவு தந்து மத்திய பதவிகளை பெற்று விடலாம் என்று நினைத்திருந்தார் சந்திரசேகர ராவ். அது நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்த அவர், கடந்த வியாழக்கிழமை மாலை, வெற்றி பெற்ற 9  எம்பி.க்களை வாழ்த்த கூட மறுத்து விட்டார். அமைச்சர்கள் எவ்வளவோ  முயன்றும் அனுமதிக்க மறுத்து விட்டார். ‘16 இடங்களில் வெற்றி பெற்று உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம்’ என்று சூளுரைத்த  அமைச்சர்கள் மீது சந்திரசேகர ராவ்  கடும் கோபத்தில் உள்ளார். அதோடு, தனது மாநிலத்திலும் பாஜ காலூன்றி செல்வாக்கு பெற்று விட்டது, அவரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக, ஓரிரு நாளில் மூத்த அமைச்சர்கள் இருவர் பதவி பறிக்கப்படலாம் என்று  டிஆர்எஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.   

மூலக்கதை