சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலில் அதிரடி முடிவுக்கு வந்தது 24 ஆண்டுகால சாம்லிங் ஆட்சி: அருணசாலப் பிரதேசத்தை கைப்பற்றிய பாஜ

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலில் அதிரடி முடிவுக்கு வந்தது 24 ஆண்டுகால சாம்லிங் ஆட்சி: அருணசாலப் பிரதேசத்தை கைப்பற்றிய பாஜ

சிக்கிம்: சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் 24 ஆண்டு காலம் முதல்வராக இருந்த பவன் குமார் சாம்லிங் ஆட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல், அருணாசலப் பிரதேசத்தை பாஜ கட்சி ைகப்பற்றி உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தலுடன், 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைப்பெற்றது. இத்தேர்தலில் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சிக்கு, தற்போது சிக்கிம் கிராந்திகர் மோர்ச்சா கட்சி முடிவு கட்டியுள்ளது.

மக்களவை, சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கும், சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

அந்த மாநிலத்தில் 1994ம் ஆண்டில் இருந்து 5 முறை முதல்வராக இருந்த பவன்குமார் சம்லிங்க் மீண்டும் களம் கண்டார். ஆனால், பவன்குமாரின் கட்சி 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது.

சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று பவன் குமார் சம்லிங்கின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது எனினும் முதல்வராக யார் பதவியேற்பார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேபோல், அருணாசலப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் பாஜ கட்சி முதன்முறையாக 32 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது.

அங்குள்ள 60 தொகுதிகளில் 3 இடங்களில் பாஜ எம்எல்ஏக்கள் போட்டியின்றி தேர்வாகியிருந்த நிலையில், மேலும் 29 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெறும் 11 இடங்களில் மட்டுமே வென்ற பாஜ கட்சி இம்முறை அசுர வளர்ச்சி பெற்று தனித்து ஆட்சி அமைக்கிறது. இங்கு காங்கிரஸ் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியைத் தழுவியுள்ளது.

அந்த மாநிலத்தின் முதல்வராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

.

மூலக்கதை