மோடிக்கு கிடைத்த வெற்றி மதவாதத்துக்காக கிடைத்ததா? தேசபாதுகாப்புக்கு கிடைத்ததா?: பாக். ஊடகங்கள் மாறுபட்ட கருத்து

தினகரன்  தினகரன்
மோடிக்கு கிடைத்த வெற்றி மதவாதத்துக்காக கிடைத்ததா? தேசபாதுகாப்புக்கு கிடைத்ததா?: பாக். ஊடகங்கள் மாறுபட்ட கருத்து

இஸ்லாமாபாத்: `தேசத்தின் பாதுகாப்பை முன்னிறுத்தியதால் கிடைத்த உறுதியான வெற்றி’, `வகுப்பு வாதத்திற்கு கிடைத்த வெற்றி’, `உலகளவில் வலதுசாரிகள் வெற்றி பெற்றுவதால் கிடைத்த வெற்றி’ என்று பாகிஸ்தான் ஊடகங்கள் பிரதமர்  மோடியின் வெற்றி குறித்து பல விதமான கருத்துகளை வெளியிட்டுள்ளன.மக்களவைத் தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதையடுத்து அமெரிக்கா, இஸ்‌ரேல், ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் மோடிக்கு எதனால் வெற்றி கிடைத்தது என்பது பற்றிய கருத்துகளை பாகிஸ்தான் ஊடகங்கள் நேற்று வெளியிட்டன.இதில் சில நாளிதழ்கள் அமெரிக்கா, பிரேசில், இத்தாலி ஆட்சியாளர்கள் தேச பாதுகாப்பு, குடியுரிமை, ராணுவம் ஆகிய துறைகளில் கடுமையான நிலைப்பாடு எடுக்கப்படும் என தேசத்தின் பாதுகாப்பை முன்னிறுத்தி வெற்றி பெற்றது போல்,  மோடியும் தேசத்தின் பாதுகாப்பை வழிமொழிந்ததால் உறுதியான வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், ஆரம்பத்தில் பாலகோட் தாக்குதல் பற்றி மட்டுமே பேசி வந்த மோடி, தேர்தல் நெருங்கும் சமயத்தில் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக மத உணர்வை தூண்டும் வகையில் நச்சுத்தன்மை கொண்ட வெறுக்கத்தக்க  பேச்சு பேசினார். இதனால், இது அவரது வகுப்புவாத அரசியலுக்கு கிடைத்த வெற்றி என ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.மற்றொரு ஊடகம், உலகளாவிய நிலையில் தற்போது வலதுசாரி அமைப்பினர் வெற்றி பெறுவது தற்போதைய நடைமுறையாக உள்ளது. அதே போன்று இந்தியாவில் மோடி வெற்றி பெற்றுள்ளார் என ஒப்பிட்டுள்ளது.சீனா வரவேற்புதேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ மோடியுடன் ஒத்துழைக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு நன்றி  தெரிவித்த மோடி, ‘வாழ்த்துக்கு நன்றி. நமது பிராந்திய அமைதிக்கு எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறேன்’ என பதில் அளித்தார். இந்த வாழ்த்து பரிமாற்றம் குறித்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லு காங் நிருபர்களிடம்  கூறுகையில், ``தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இரண்டும் முக்கியமான நாடுகள். உலக நாடுகளின் விருப்பதிற்கேற்ப இருநாடுகளும் அப்பகுதியின் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும். சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி  பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இருதரப்பும் இணைந்து இதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறினார்.

மூலக்கதை