ஓமனில் வெள்ளத்தில் சிக்கிய 4 இந்தியர் சடலங்கள் மீட்பு

தினகரன்  தினகரன்
ஓமனில் வெள்ளத்தில் சிக்கிய 4 இந்தியர் சடலங்கள் மீட்பு

துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமனில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. அப்பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டன. அந்நேரம், இந்தியாவை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர் தனது குடும்பத்தினருடன் மஸ்கட்டில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள வாடி பானி காலித் என்னும் இடத்துக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதில் இருந்து தப்பிய அவர் அருகில் இருந்த பனை மரத்தின் மீது ஏறி உயிர் தப்பினார். அவரது பெற்றோர், மனைவி, 2 குழந்தைகள் உள்பட 6 பேர் இருந்த வாகனம்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்து ஓமன் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் அவர்களை தேடும் பணி நடந்து வந்தது.இந்நிலையில், ஓமன் போலீஸ் வெள்ளத்தில் சிக்கிய 4 இந்தியர்களின் சடலங்களை மீட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காணாமல் போன இந்தியர்களை தேடும் பணியில் நால்வரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மீட்புப் படையினர் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்று கூறினார்.

மூலக்கதை