குஜராத் பயிற்சி மையத்தில் திடீர் தீ 20 மாணவர்கள் பலியான பரிதாபம்: பிரதமர் மோடி இரங்கல்

தினகரன்  தினகரன்
குஜராத் பயிற்சி மையத்தில் திடீர் தீ 20 மாணவர்கள் பலியான பரிதாபம்: பிரதமர் மோடி இரங்கல்

சூரத்: குஜராத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கி வந்த பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத்தின் சூரத் நகரில் தக்சில்லா என்ற பெயரில் பிரமாண்ட வணிக வளாகம் இயங்கி வருகிறது. இங்குள்ள மூன்று மற்றும் நான்காவது தளத்தில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று திடீரென இந்த பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. குபுகுபுவென அறை முழுவதும் தீ பரவியதால் அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து வெளியே வர முயன்றனர். அதற்குள்ளாக தீ மளமளவென பற்றி எழுந்ததால் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் மாணவர்கள் பலர் தீயில் சிக்கினார்கள். பல மாணவர்கள் தங்களது உயிரை காத்துக்கொள்வதற்காக 3வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்தனர். 19 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ விபத்து ஏற்பட்ட தளங்களை புகை மூட்டம் சூழ்ந்ததால் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு துறை வீரர்கள் பல மணி நேரம் போராடினார்கள். மீட்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீயில் சிக்கி பலத்த காயமடைந்த 20 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதனிடையே மாணவர்கள் 3மற்றும் 4வது மாடிகளில் இருந்து கீழே குதிக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியதால் பதற்றம் ஏற்பட்டது. தீ விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி டிவிட்டர் பக்கத்தில், “உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை