பாதுகாப்பு படை அதிரடி அல் கொய்தா தீவிரவாதி காஷ்மீரில் சுட்டுக்கொலை: ஊரடங்கு உத்தரவு அமல்

தினகரன்  தினகரன்
பாதுகாப்பு படை அதிரடி அல் கொய்தா தீவிரவாதி காஷ்மீரில் சுட்டுக்கொலை: ஊரடங்கு உத்தரவு அமல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் அல்கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடப்பதை தடுக்க முன்னெச்சரிக்கையாக நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.இதில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் ஒருவன் அன்சார் கஸ்வாட் உல் இந்த் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் ஜாகீர் முசா என கூறப்படுகிறது. அங்கு முசா பதுங்கியிருந்ததாக அவரது குடும்பத்தினரும் உறுதிபடுத்தி உள்ளனர். இந்த அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது. மேலும் ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பில் இருந்த முசா, அந்த அமைப்பின் கமாண்டர் பர்கான் வானியுடன் நெருக்கமாக இருந்தவன்.அவன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் பரவியதும், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் ஏற்படத் தொடங்கின. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபுரா, அனந்த்நக், பத்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடியிருந்தன. கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பாதுகாப்பு படையினர் முழு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். மொபைல் இன்டர்நெட் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பில் இருந்த முசா, அந்த அமைப்பின் கமாண்டர் பர்கான் வானியுடன் நெருக்கமாக இருந்தவன்.

மூலக்கதை