அமெரிக்கா சலுகை முடிந்ததால் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி முற்றிலும் நிறுத்தம்: மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை உயரலாம்

தினகரன்  தினகரன்
அமெரிக்கா சலுகை முடிந்ததால் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி முற்றிலும் நிறுத்தம்: மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை உயரலாம்

புதுடெல்லி: ஈரான் மீதான கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தி விட்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்துக்கு மேல் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இறக்குமதி அதிகரித்துள்ளது.இதற்கிடையில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. இந்த தடை கடந்த நவம்பரில் அமலுக்கு வந்தது. ஆனாலும், இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய 6 மாதம் சலுகை அளித்தது. இந்த சலுகை கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா கூறுகையில், ‘‘இறக்குமதி சலுகையை நீடிக்க அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதையடுத்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தி விட்டது. இதுபோல் வெனின்சுலாவில் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா தடைவிதித்ததால், அங்கிருந்தும் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது முடிவுக்கு வந்து விட்டது.எனவே மாற்று எரிபொருள் தேவையை நாடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது’’ என்றார். இந்திய கச்சா எண்ணெய் தேவையில் 10 சதவீதத்தை ஈரான் சப்ளை செய்கிறது. இதை ஈடுகட்டும் வகையில் மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற வேண்டும். அல்லது உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரால், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது ஆகிவிடும். தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் பாதிப்பு இல்லை. சர்வதேச சந்தையில் இதே நிலை தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

மூலக்கதை