பங்குச்சந்தை அபார ஏற்றம்

தினகரன்  தினகரன்
பங்குச்சந்தை அபார ஏற்றம்

மும்பை: பங்குச்சந்தைகள் நேற்று அபாரமாக ஏற்றம் பெற்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 623 புள்ளிகள் அதிகரித்தது.தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பங்கு முதலீடுகளை முதலீட்டாளர்கள் தவிர்த்தனர். கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 9 நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த 9 நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ.8.53 லட்சம் கோடியை இழந்தனர். பங்குசந்தை குறியீடு 1,941 புள்ளிகள் சரிந்தது. கருத்துக்கணிப்பில் பாஜ வெற்றி பெறலாம் என்று வெளியானபோது மும்பை பங்குச்சந்தை 1,422 புள்ளிகள் அதிகரித்தது. நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. பெரும்பாலான இடங்களில் பாஜ முன்னிலை வகித்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை எட்டியது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி முதல் முறையாக 12,000 புள்ளிகளை தொட்டது.ஆனாலும், பங்கு வர்த்தகர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்க தொடங்கியதால் மாலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 298.82 புள்ளிகள் சரிந்து 38,811.39 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 80.85 புள்ளிகள் சரிந்து 11,657.05 ஆகவும் இருந்தது. இதற்கு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் பற்றிய அச்சமே காரணமாக இருந்தது. ஆனால், நேற்று பங்குசந்தைகள் அபார ஏற்றம் கண்டன வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து 39,435 ஆகடும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 187 புள்ளி உயர்ந்து 11,844 ஆகவும் இருந்தது. மத்திய பாஜ அரசு முன்பை விட அதிக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ளதால், புதிய பொருளாதார சீரமைப்புகள், உள்கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அதோடு, நலிவடைந்த பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த கூடுதலாக மூலதனம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால்தான் பங்குச்சந்தை நேற்று ஏற்றம் அடைந்தது. வங்கித்துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டன என சந்தை நிபுணர்கள் கூறினர். மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு கடந்த 2014 மே 16ம் தேதி மத்தியில் பாஜ அரசு பதவியேற்றபோது ரூ.75 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இது இரட்டிபாக, அதாவது, ரூ.150.25 லட்சம் கோடியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை