புதிய நிதியமைச்சருக்கு 4 சவால்கள்

தினமலர்  தினமலர்
புதிய நிதியமைச்சருக்கு 4 சவால்கள்

வரும், 23ம் தேதி, நாட்டின் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும். வரவிருக்கும் புதிய அரசாங்கம் என்னவிதமான பொருளாதார சவால்களை சந்திக்க இருக்கிறது? சமீபத்தில் ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர், ப.சிதம்பரம், “அடுத்து வரவிருக்கும் நிதியமைச்சரை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்,” என்றார்.

இவர் சொல்லும் அளவுக்கு இல்லையென்றாலும், நிச்சயம் வரப்போகும் நிதியமைச்சருக்கு, ஒரு நாளின், 24 மணிநேரங்கள் போதமானதாக இருக்கப் போவதில்லை!முதலில் இரண்டு உடனடி பெரிய பிரச்னைகள். முதலாவது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து புகைந்து வரும் வர்த்தகப் போர், இந்தியா மீது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்றுமதிகளிலும், இறங்குமதிகளிலும், டாலர் கையிருப்புகளிலும் இந்தப் போர் ஏற்படுத்தும் பாதிப்புகள் கடுமையாக மாறி வருகின்றன. இரண்டாவது, ஈரானில் இருந்து இனிமேல் கச்சா எண்ணெய் வாங்க முடியாது என்பது. புதிய நாடுகளில் இருந்து கூடுதல் நிதி கொடுத்து, கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய சூழல். இதனாலும், நம் டாலர் கையிருப்பு கரைந்து போகும். இன்னொருபுறம், பணவீக்கம் கூடிக்கொண்டே போவதற்கான வாய்ப்பும் அதிகம்.

இவை உடனடி கவனத்தைக் கோருபவை. அதேசமயம், உள்நாட்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், புதிய நிதியமைச்சரை பிசியாக வைத்திருக்கப் போகிறது. இவற்றை நான்காகபிரித்துக் கொள்ளலாம்.பொருளாதார வேகம்இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் நிச்சயம் தேங்கிப் போயிருக்கிறது. கடந்த, 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் கார், இரு சக்கர வாகன விற்பனை, 17 சதவீதம் சரிவு. கார் ஓர் ஆடம்பரப் பொருள், அதனால் அதன் விற்பனை வீழ்ச்சி பொருட்டில்லை என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால், மக்கள் வழக்கமாக வாங்கக்கூடிய சோப்புகள், பல் துலக்கும் பேஸ்டுகளின் விற்பனை கூட குறைந்துவிட்டது.அதனால் தான், மார்ச், 31 உடன் முடிவடைந்த காலாண்டில், எப்.எம்.சி.ஜி., எனப்படும், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருட்களின் விற்பனை குறியீட்டளவு சரிந்து போயிருக்கிறது.

ஐ.ஐ.பி., எனப்படும், இந்திய தொழில் உற்பத்தி, மார்ச் மாதத்தில், 0.1 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த, 21 மாதங்களில் இல்லாத சரிவு இது. 2018_-19 நிதியாண்டில், தொழில் உற்பத்தியின் அளவு 3.6 சதவீதம் தான். இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவு.கடந்த மாதம்தான், ‘இந்திய பொருளாதாரம் 2018 – -19ல் மந்தமானதாகத் தெரிகிறது’ என, நிதியமைச்சகம் கவலை தெரிவித்தது. 7.2 சதவீதமாக இருக்கும் என்று கருதப்பட்ட ஜி.டி.பி., தற்போது, 7 சதவீத அளவுக்கே இருக்கலாம் என்று எண்ணுகிறது, மத்திய புள்ளியியல் துறை.ஒவ்வொரு காலாண்டும், விவசாயம் பொய்த்துப் போனதை, நம் ஜி.டி.பி., மதிப்பீடுகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

ரியல் எஸ்டேட் துறையிலும் முன்பிருந்த உற்சாகம் இல்லை.இந்தச் சூழ்நிலையை மாற்ற வேண்டும். வலுவான அரசாங்கத்தின், தெளிவான கொள்கைக் குறிப்புகளும் திட்டங்களுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். முக்கியமாக, வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும். வரி வருவாயை அதிகப்படுத்த வேண்டும்.வாராக் கடன் வசூலை மேம்படுத்த வேண்டும். திவால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தி, கொடுத்த பணத்தைப் பெற்றே ஆக வேண்டும். வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் வழங்கி, மீண்டும் கடன் கொடுப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.ஈர்க்க வேண்டும்

தொழில் மற்றும் சேவைத் துறை வளர்ச்சிக்கு அரசாங்க முதலீடு மட்டும் போதாது. தனியார் மூலதனமும் அவசியம்.சென்ற அரசாங்கம் ரயில்வே துறையிலும், பாதுகாப்புத் துறையிலும் நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால், போதிய மூலதனம் வந்துசேரவில்லை.கடைசி நேரத்தில் ஏற்பட்ட பல்வேறு கொள்கை குழப்பங்கள், அந்நிய முதலீட்டாளர்களைத் தயங்கச் செய்தது. அந்த நிலையையும் மாற்றி, நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.உருவாக்க வேண்டும்

இனிமேல் பழைய சிந்தனைகள் உதவாது. அதாவது, அரசாங்கமே வேலைகளை வழங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சாத்தியமில்லை. ஆனால், வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சூழ்நிலையை, வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.சுய தொழில்களையும் நுண், குறு சிறு, குறுந் தொழில்களையும் வளர்ப்பதற்குத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். சந்தையை உருவாக்க வேண்டும். அதன்மூலம், வேலைவாய்ப்புகள் பெருகும்.கட்டுப்படுத்த வேண்டும்ஒவ்வொரு கட்சியும் வாக்குகளைப் பெறுவதற்காக வாரி வழங்கியுள்ள வாக்குறுதிகள் அத்தனையும், அரசு கஜானாவைக் காலிசெய்யக் கூடியவை. இதனால், பணவீக்கமும் நிதிப் பற்றாக்குறையும் அதிகமாகப் போவது நிச்சயம்.

அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் இவற்றை இழுத்துப் பிடித்து, சமச்சீரான நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.வசதியாக, நிம்மதியாக, குறையில்லாமல் இருக்கிறோம் என்ற சுபிட்ச உணர்வு ஏழை எளியவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களிடம் ஏற்பட வேண்டும்.அதைத் தான் பொருளாதாரத் தன்னிறைவு என்கிறோம். அதற்கான பாதை எதுவோ, அதனை புதிய நிதியமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்

-ஆர் வெங்கடேஷ்

மூலக்கதை