நிதானமாக முடிவெடுக்கும் நேரமிது

தினமலர்  தினமலர்
நிதானமாக முடிவெடுக்கும் நேரமிது

இந்த பதிவை நீங்கள் படிப்பதற்குள், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் கருத்துக் கணிப்பு விபரங்கள் வெளிவந்து இருக்கும். இந்த கருத்துக் கணிப்புகள், இறுதி முடிவில் இருந்து எவ்வளவு வேறுபடும் என்ற விவாதங்களும் உடனடியாக துவங்கி இருக்கும். மாநில வாரியான தகவல்களும், அவற்றின் நம்பகத்தன்மையும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது உறுதி.

சர்ச்சைக்குரிய தகவல்கள் அடங்கி இருந்தாலும், பங்குச் சந்தையில் இந்த கருத்துக் கணிப்புகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.எதையுமே முந்தி அறிந்து கொண்டு, அது சார்ந்த முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க, சந்தை ஆர்வமாக இருப்பது அதன் இயல்பு. இத்தகைய சமயங்களில் அந்த ஆர்வம் பெருக்கெடுத்து ஓடக்கூடும்.அடுத்து நடக்கப்போகும் அரசியல் நகர்வுகள், சந்தைக்கு சாதகமாக அமைந்தால், எங்கே நாம் சந்தையின் ஏற்றத்தில் பங்கேற்காமல் போய்விடுவோமோ என்ற பயம் அனைவரையும் ஆட்கொள்ளும்.

அடுத்த நான்கு நாட்கள் சந்தையில், இந்த பயத்தின் வெளிப்பாடு முதலீட்டாளர்களின் ஒவ்வொரு முடிவிலும் தெரியும். ஆர்வமும், பயமும், பேராசையும், அச்சமும் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு வகையில் உருவெடுக்கும்.இதிலிருந்து முதலீட்டாளர்கள் தப்பிக்க, இந்த ஒட்டுமொத்த அரசியல் விவகாரங்களில் இருந்து தள்ளி இருப்பது மட்டும் தான் ஒரே வழி.அப்படி விலகி இருந்தால், எங்கே, நாம் சந்தையின் ஏற்றத்தில் பங்கேற்க தவறிவிடுவோமோ என்ற அச்சம் முகாந்திரம் அற்றதாகிவிடும். அதற்கான அடிப்படை காரணங்கள், நம் பொருளாதார நிலையையும், நிறுவன மதிப்பீட்டு அளவீடுகளையும் சார்ந்தவை.

கடந்த ஆறு மாதங்களாக, இந்திய பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் முக்கிய பொருளாதார குறியீடுகளும் சற்றே மந்தமாக காட்சியளித்தது உண்மை. இதற்கு, பல அரசியல் காரணங்களும் பங்களித்தன. தேர்தல் சமயத்தில், அரசியல் காரணிகள், பொருளாதார நகர்வுகளை புறம்தள்ளுவது, ஒவ்வொரு பொதுத்தேர்தல் நேரத்திலும் நடக்கும் ஒன்று தான்.தேர்தலில் வெற்றி பெற்றபின், ஆட்சி அமைக்கும் தலைமை, மீண்டும் பொருளாதார முன்நகர்வுகளையும், கொள்கை மாற்றங்களையும் வேகமாக எடுப்பது வழக்கம். அவற்றின் தாக்கம் நிறுவன அளவில் வெளிப்பட சிலகாலம் ஆகும்.

அந்த இடைப்பட்ட காலத்தில், சர்வதேச சந்தை சார்ந்த மாற்றங்கள் நம் சந்தையையும் பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் சார்ந்து நம்முடைய குறியீடுகள் பாதிக்கப்படலாம். ஆகவே, புதிய ஆட்சி தொடர்ந்து பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் விதமே சந்தையின் தொடர் போக்கை நிர்ணயிக்கும்.எனவே, தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற ஒரு அம்சம் சார்ந்து மட்டும் முதலீட்டு முடிவுகளை எடுப்பதை இப்போது தவிர்ப்பது நல்லது. அதில் ஏற்படக்கூடிய குறுகியகால சந்தை மாற்றங்களை கடந்து, முதலீட்டு முடிவுகளை எடுப்பது அவசியம்.

கடந்த, 2014ல் தேர்தல் முடிவுகளுக்கு பின், உடனடி விலை ஏற்றம் கண்ட பல பங்குகள், அந்த விலை வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதே வரலாறு.அதேசமயம், சமீபகாலங்களில் பெரும் முதலீட்டு வெற்றி தந்த நிறுவனங்களை அடையாளம் காணவே, பல காலம் ஆனது என்பதை நாம் அறிவோம்.ஆகவே, நிலையான மதிப்பு வளர்ச்சியை தரும் பங்குகளை, நிதானமாக சிந்தித்து வாங்கும் வழக்கம் உடையவர்கள் தான், கடந்த ஐந்து ஆண்டுகளில் லாபம் கண்டு இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த போக்கு இன்னும் முக்கிய வெற்றி மந்திரமாக, முதலீட்டு துறையில் அமையும் என்பதை நினைவில் கொண்டு, அடுத்து வரும் சில நாட்களை நிதானமாக சிந்தித்து கழிப்பதே நல்லது.

-ஷியாம் சேகர்

மூலக்கதை