கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் 308 வகை பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் 308 வகை பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் உள்ளிட்ட பகுதிகளில் 308 வகை பறவைகள் உயிர் வாழ்வதாக, சேலம் இயற்கை மற்றும் வனவாழ் உயிரின அறக்கட்டளை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. சென்னை மாகாணமாக இருந்த காலகட்டத்தில் 1929-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் கென்னர் மற்றும் விஷிலர் ஆகிய இரு ஆங்கிலேய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்காடு மலை அடிவாரமான குரும்பப்பட்டி பூங்கா பகுதியில் முகாம் அமைத்து அவர்கள் தங்கி, பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொண்டனர். கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் உள்ள ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பில் 197 வகை பறவைகள் உயிர் வாழ்ந்ததாகப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்காடு மலைப் பகுதியில் பாறு கழுகுகள் எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள், சாம்பல் நிற இருவாச்சி (கிரே ஹார்ன்பில்) பறவைகள் உயிர் வாழ்ந்ததாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் வாழிடம் உள்ளிட்ட சூழல் பிரச்னையால் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து இந்தப் பறவைகள் இடமாறிச் சென்றுவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, டேவிட் பேட்ரிக் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் பறவைகள் கணக்கெடுப்பை மறு மதிப்பீடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பெரிய அளவில் நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட வி.கோகுல் மற்றும் புவியியல் வல்லுநர் என்.முருகேசன் ஆகியோர் சேலம் இயற்கை மற்றும் வனவாழ் உயிரின அறக்கட்டளையை 2015-இல் நிறுவினர். 
இதன் மூலம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பறவை இனங்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினர். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 2018, 2019-இல் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 308 வகை பறவைகள் உயிர் வாழ்வதாகக் கணக்கிட்டு உள்ளனர்.

ஏற்காடு மலை அடிவாரம், ஏற்காடு மலை, கல்வராயன் மலை (கருமந்துறை) உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள வன சரகத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, சேலம் இயற்கை மற்றும் வனவாழ் உயிரின அறக்கட்டளை நிர்வாகிகள் வி.கோகுல், என்.முருகேசன் ஆகியோர் கூறியதாவது:

ஆங்கிலேயர்கள் கடந்த 1929-இல் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 197 வகை பறவைகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அதன்பின்னர் பறவைகள் கணக்கெடுப்பு செய்யப்படவில்லை. 
இந்த நிலையில், 2015 முதல் பல்வேறு நிலைகளில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உயிர் வாழும் பறவைகளைக் கணக்கெடுக்க முடிவு செய்தோம். அதன்படி, 2018-ல் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
இதில் ஏற்காடு மலையில் வாழும் மஞ்சள் தொண்டை சின்னான், வெண் பிடரி பட்டாணிக் குருவி, நீலகிரி ஈ பிடிப்பான், மரகதப் புறா, செம்மீசை சின்னான், மாங்குயில், வெள்ளைக்கண்ணி, அரசவால் ஈ பிடிப்பான், செந்தலைக்கிளி, துடுப்புவால் கரிச்சான், காட்டு பாம்புக் கழுகு, குடுமி பருந்து, சிறிய காட்டுப் பருந்து உள்ளிட்ட அரிய வகை பறவைகள் உயிர் வாழ்வது தெரியவந்தது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்பட்ட நீலகிரி ஈ பிடிப்பான், கிழக்குத் தொடர்ச்சி மலையில் உயிர் வாழ்வது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சைபீரியாவில் வாழும் அமூர் வல்லூறு (அமூர் பால்கன்) சைபீரியாவில் இருந்து இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் வழியாக வந்து, தமிழகத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் உள்ள ஏற்காட்டில் சிறிது தங்கி சென்றது தெரிய வந்துள்ளது. 

பின்னர், மீண்டும் புறப்பட்டு தென்னாப்பிரிக்காவில் தனது பயணத்தை வல்லூறு நிறைவு செய்யும். அதேபோல, சேலம் மூக்கனேரி உள்ளிட்ட நீர்நிலைகள், விவசாய நிலம் சார்ந்த இடங்களில் உயிர் வாழும் புள்ளி மூக்கு வாத்து, முக்குளிப்பான், நீலத்தாழைக்கோழி, செந்நீல நாரை, சிறிய நீல மீன் கொத்தி, வெண்மார்பு மீன் கொத்தி, கருப்பு வெள்ளை மீன் கொத்தி, கரிச்சான், பனங்காடை, இந்திய பக்கி, மாம்பழ சிட்டு, புதர் வானம்பாடி, காட்டு கீச்சான் ஆகியவையும் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்காடு மலைப் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிர் வாழ்வது தெரியவந்துள்ளது. 2019-ல் மாவட்டத்தில் உள்ள வனவிலங்குகள் கணக்கெடுப்பையும் இந்த அறக்கட்டளை மேற்கொண்டு உள்ளது. 
மாவட்ட வனத்துறை மற்றும் வன உயிரின நிதியம் ஆகியவையுடன் இணைந்து வன விலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. மேட்டூர் வனப் பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், ஏற்காடு பகுதியில் காட்டெருமை, காட்டுப் பூனை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கேமராக்களை நிறுவி வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. விரைவில் முழு அளவில் ஆய்வு செய்யப்பட்டு, வனவிலங்குகள் குறித்த தகவல்களை மாவட்ட வனத்துறையினர்  வெளியிடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மூலக்கதை