இத்தாலியன் ஓபன் டென்னிஸ் 9வது முறையாக கோப்பையை கைப்பற்றி நடால் சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் 9வது முறையாக கோப்பையை கைப்பற்றி நடால் சாதனை

ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி, ரஃபேல் நடால் 9வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றார். ரோமில் நேற்று நடந்த இத்தாலியன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும் மோதினர்.

முதல் செட்டில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திய நடால், அந்த செட்டை ஜோகோவிச்சின் அனைத்து கேம்களையும் பிரேக் செய்து, 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். சர்வதேச ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்திலும், நடால் 2ம் இடத்திலும் உள்ளனர்.

இருவரும் இதற்கு முன்னதாக 52 முறை மோதியுள்ளனர். இதில் ஜோகோவிச் 28 முறையும், நடால் 24 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

எனினும் இருவருமே இதுவரை எந்த செட்டையும் 6-0 என்ற கணக்கில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக இப்போட்டியில் ஒரு செட்டில் ஜோகோவிச்சை 6-0 என வீழ்த்தி நடால் சாதனை படைத்துள்ளார்.

இருப்பினும் 2வது செட்டில் ஜோகோவிச் கடுமையாக போராடினார்.

அந்த செட்டை நடாலின் ஒரு கேமை பிரேக் செய்து, 6-4 என ஜோகோவிச் கைப்பற்ற, ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. ஆனால் 3வது செட்டில் நடால் மீண்டும் எழுச்சியுடன் ஆடினார்.

களிமண் ஆடுகளத்தில் நான்தான் நம்பர் 1 என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது ஆட்டம் இருந்தது. அவரது அதிவேக சர்வீஸ்களில் அனல் பறந்தது.

ஜோகோவிச்சின் ஃபோர்ஹேண்ட் ஷாட்டுகள் அனைத்தும் நெட்டில் பட்டன. அல்லது கோட்டை விட்டு வெளியே சென்றன.

இதனால் அந்த செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றிய நடால், 6-0, 4-6, 6-1 என 3 செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி, இத்தாலியன் ஒபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றினார். நடால் வெல்லும் 9வது இத்தாலியன் ஓபன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பின்னர் ஜோகோவிச் கூறுகையில், ‘‘நடால் மிகச் சிறந்த வீரர். என்னுடைய மதிப்பு மிக்க எதிரிகளில் ஒருவர்.

இன்று அவரது ஆட்டம் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது’’ என்றார். இன்னும் 10 நாட்களில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் துவங்க உள்ள நிலையில், நடாலின் இந்த வெற்றி அவரது நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றே முன்னாள் டென்னிஸ் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிளிஸ்கோவா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோகன்னா கோன்டாவும், செக்.

குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.

இதில் பிளிஸ்கோவா 6-3, 6-4 என நேர் செட்களில் கோன்டாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

.

மூலக்கதை