பாகிஸ்தானுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி 74 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி 74 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

லீட்ஸ்: லீட்ஸில் நேற்று நடந்த 5வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

லீட்சில் 5 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர் கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது.

ஓவலில் நடந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. சவுத்தாம்ப்டன், பிரிஸ்டல் மற்றும் நாட்டிங்காமில் நடந்த ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது.

ஓபனர்கள் ஜேம்ஸ் வின்ஸ் 33 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 32 ரன்கள் எடுத்தனர். ஜோ ரூட் 84 ரன்கள்(9 பவுண்டரி), கேப்டன் இயான் மோர்கன் 76 ரன்கள்(4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட், இமத் வாஸிம் 3 விக்கெட் வீழ்த்தினர்.

352 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 46. 5 ஓவர்களில் 297 ரன்கள் மட்டுமே எடுத்து, 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஓபனர் பாபர் அஸாம் 80 ரன்களை (9 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தார்.

கேப்டன் சர்பராஸ் அகமது 97 ரன்களை (7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஆஸிப் அலி 22 ரன், இமத் வாஸிம் 25 ரன், முகமது ஹஸ்னைன் 28 ரன்கள் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து பவுலர் கிறிஸ் வோக்ஸ் 10 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வானார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை இங்கிலாந்து அணி 4-0 என கைப்பற்றியுள்ளது. இத்தொடரின் 3 போட்டிகளில் ஆடி 277 ரன்கள் குவித்த ஜேசன் ராய் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்
இங்கிலாந்து - 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் (ஜேம்ஸ் வின்ஸ் 33 ரன், ஜானி பேர்ஸ்டோ 32 ரன், ஜோ ரூட் 84 ரன், இயான் மோர்கன் 76 ரன், ஜாஸ் பட்லர் 34 ரன், பென் ஸ்டோக்ஸ் 21 ரன், டாம் கரண் 29 ரன், ஷாஹீன் அப்ரிடி 4/82, இமத் வாஸிம் 3/53).

பாகிஸ்தான் - 46. 5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் (பாபர் அஸாம் 80 ரன், சர்பராஸ் அகமது 97 ரன், இமத் வாஸிம் 25 ரன், முகமது ஹஸ்னைன் 28 ரன், கிறிஸ் வோக்ஸ் 5/54).

.

மூலக்கதை