டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

புதுடெல்லி: வரும் ஜூன் 12ல் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழுக்  கூட்டம் நடைபெறுகிறது.   நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.   ஒவ்வொரு குழுவிலும் தலா 9 பேர் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். ஆணையத்தின் தலைவராக மசூத் உசேனும், ஒழுங்காற்று குழுவின் தலைவராக  நவீன்குமாரும் உள்ளனர்.

காவிரி ஆணையத்தின்  கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதியும், அதேபோல் ஒழுங்காற்று  குழுவின் கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதியும் இறுதியாக  நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான  காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று கூட்டம் ஆகியவை ஒருமுறைக் கூட  நடத்தப்படாமல் உள்ளது.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.

ஆனால் அதற்கான எந்தவித நடவடிக்கையும்  ஆணையமோ, மத்திய மாநில அரசுகளோ எடுத்துள்ளதாக தெரியவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் மிகுந்த கவலையுடனும், விவசாயத்திற்கு தண்ணீர்  வரும் என்ற எதிர்பார்ப்போடும் தவித்து வருகின்றனர்.

இவ்விவகாரம் பூதாகரமாக மாறும் நிலையில், தற்போது காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நாளை  நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும், நாளை நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதேநாளில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடத்த  இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நாளை சேவா பவனில் நடக்கும் ஒழுங்காற்று குழுக் கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடக்கிறது.   அதில், 4 மாநில குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், வரும் 28ம் தேதி காவிரி நீர் ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் மசூத் உசேன்  தலைமையில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



.

மூலக்கதை