ஆந்திராவில் இலங்கை நாட்டு படகுகள் பறிமுதல்... ஸ்ரீஹரிகோட்டாவில் ஐ அலர்ட்: தாக்குதல் நடத்த திட்டமா? தீவிர விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திராவில் இலங்கை நாட்டு படகுகள் பறிமுதல்... ஸ்ரீஹரிகோட்டாவில் ஐ அலர்ட்: தாக்குதல் நடத்த திட்டமா? தீவிர விசாரணை

திருமலை: ஆந்திராவில் இலங்கையை சேர்ந்த 2 நாட்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவில் ‘ஐ’ அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த திட்டமா என்று விசாரணை நடத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் விடவலூறு மண்டலம் பன்னபுடி பாத்தவுரு கடற்கரை அருகே இலங்கையை சேர்ந்த 2 நாட்டுப்படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையிலல், அந்த படகுகள் 2 நாட்களுக்கு முன்பு வந்ததாக கூறப்படுகிறது.

படகில் வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தேசிய புலனாய்வு அமைப்பு நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இலங்கையை சேர்ந்த 2 நாட்டுப்படகுகள் நெல்லூர் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ராணுவ பயன்பாட்டிற்காக நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.

இதையொட்டி ஸ்ரீஹரிகோட்டா முழுவதும் `ஐ’ அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டா முழுவதும் சிஐஎஸ்எப் வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் உள்ளூர் போலீசாரும், கடற்படையினரும், மரைன் போலீசார், கடற்கரை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

திருமலையில் இருந்து ஆக்டோபஸ் கமாண்டோ படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

ஐதராபாத்தில் இருந்து சிறப்பு அதிரடிப்படையினரும் வந்திருந்தனர்.

.

மூலக்கதை