பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் காதல் தம்பதிக்கு சரமாரி அடி, உதை: காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் உயிர் தப்பினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் காதல் தம்பதிக்கு சரமாரி அடி, உதை: காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் உயிர் தப்பினர்

திருமலை: காதலித்து திருமணம் செய்த தம்பதியை உறவினர்கள் அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பியோடி காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்ததால் உயிர் தப்பினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பென்துர்த்தியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(24). ரேவதி(23).

இவர்கள் பல ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது இந்த விஷயம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி இருவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கோயிலில் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பிறகு சந்தோஷின் வீட்டில் வசித்துவந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ரேவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சந்தோஷின் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த சந்தோஷிடம் பேச்சுவார்த்தை நடத்துவதுபோல் நடித்துள்ளனர்.

திடீரென சந்தோஷை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து கணவனை மீட்க போராடிய ரேவதியையும் சரமாரி அடித்துள்ளனர்.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.   அப்பகுதி மக்கள் திரண்டதால் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதன்பிறகு காதல் தம்பதி தப்பிச்சென்று பென்துர்த்தி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.



பின்னர் அவர்கள் கொடுத்த புகாரில், ‘’காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த ரேவதியின் பெற்றோர் தங்களை கொலை செய்து விடுவார்கள். தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர்.   இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என இருவரின் பெற்றோரையும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

.

மூலக்கதை