17வது நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி அபாரம்: மோடியின் வெற்றிக்கு பின்னால் 15 காரணங்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
17வது நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி அபாரம்: மோடியின் வெற்றிக்கு பின்னால் 15 காரணங்கள்

காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளியது எப்படி? எதிர்க்கட்சிகளின் வியூகம் கைகொடுக்கவில்லை

புதுடெல்லி: 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாஜ கட்சிக்கு கிடைத்த வெற்றியின் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் மத்தியில்  ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக, கட்சியின் தொண்டர்கள் முதல் தலைமை வரை திட்டமிட்டு கடினமாக உழைத்ததன் பலனை, பாஜ  கட்சி தற்போது இந்த மாபெரும் வெற்றி மூலம் அறுவடை செய்துள்ளது.   கடந்த டிசம்பரில் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளை பற்றிக் கவலைபடாமல், திட்டமிட்டு பணியாற்றி மாபெரும் வெற்றியை  பிரதமர் மோடி - பாஜ தேசிய தலைவர் அமித் ஷா கூட்டணி பாஜ கட்சிக்கு கொடுத்துள்ளது.

இந்த வெற்றியின் பின்னால் உள்ள காரணங்களை  பல்வேறு கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் பேசி வருகின்றனர். அதில், குறிப்பிடும்படியாக 15 காரணங்கள் கூறப்படுகின்றன.



1. புல்வாமா தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மற்றும் பாலகோட் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகும், இந்தியாவை பாதுகாப்பான நாடாக திகழ வைக்க, பிரதமர்  மோடியால் மட்டுமே முடியும் என்று ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது.

பாஜ கட்சி, தனது தேர்தல் வாக்குறுதிகளில்  நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து பிரசாரம் செய்தது.

2.

120 இடங்கள் தேர்வு: கடந்தாண்டு நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 சட்டசபை தேர்தல்களில் பாஜ கட்சிக்கு தோல்வி ஏற்பட்ட  நிலையிலும், அதையே ஒரு படிப்பினையாக கொண்டு மக்களவை தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டது. பாஜ கட்சியின் ஆதிக்கம் இல்லாத மாநிலங்களில்  120 இடங்களை தேர்ந்தெடுத்து அதன் வெற்றிக்கு தலைமை முதல் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை கடுமையாக உழைத்தனர்.



3. கிழக்கு மாநிலங்கள்: வடகிழக்கு மாநிலங்களில் கட்சி பெற்ற வெற்றியை தொடர்ந்து, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப்பகுதி மாநிலங்களிலும் இந்த  தேர்தலில் பாஜ கட்சி வெற்றிக்கணக்கை துவக்கியுள்ளது.

அதேபோல், தென்மாநிலங்களில் கர்நாடகாவை கைப்பற்றினாலும் முதன்முறையாக  தெலங்கானா மாநிலத்தில் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

4. கைகொடுத்த உ. பி. :  2014 லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் 80 இடங்களில் 71 இடத்தை பாஜ கட்சி வெற்றி பெற்றிருந்தது.

இந்த தேர்தலில், அங்கு  சமாஜ்வாதி கட்சி - பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதன்மூலம், பாஜ கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று  அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திட்டமிட்ட பிரசாரத்தால் அங்கும் 60க்கும் மேற்பட்ட இடங்களை பாஜ வென்றது.



5. அரசு சார்பில் விளம்பரம்: நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று பாஜ பிரசாரம் செய்து, அதற்கேற்றபடி திட்டமிட்டு பிரசாரம் செய்தது.

மோடி  அரசின் நலத்திட்டங்கள், அனைத்துதரப்பு மக்களையும் சென்றடையும் பொருட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள், மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே கட்சியின்  சார்பில் நடத்தப்பட்டன. தேர்தல் தேதி அறிவிக்கும் முன், கிட்டதிட்ட 30 நாட்களுக்கு மேலாக பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவே அரசு  சார்பில் பெரும் விளம்பரம் செய்யப்பட்டது.



6. பிரதமர் முன்னிலை:  காங்கிரஸ் - பாஜ கட்சிகளுக்கிடையே அடிப்படை சித்தாந்த மற்றும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும், தேசிய அளவில் தலைவரை  தேர்ந்தெடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியும், அதன் தலைவராக (பிரதமராக) மோடியை முன்னிலை படுத்தியும் ேதர்தல் பிரசாரம்  செய்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ அல்லது எதிர்க்கட்சிகளோ தங்கள் தரப்பில் யாரையும் குறிப்பிடும்படி முன்னிலைப்படுத்த முடியவில்லை  அல்லது வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளமுடியவில்லை.
 
7. காவலாளி திருடன்:  காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மோடி குறித்து தனிப்பட்ட தாக்குதல் (சவுக்கிதார் திருடன்), ரபேல் விவகாரம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி  போன்றவை தொடர்பான பிரசாரங்கள் இந்தி பேசும் மாநில மக்களிடையே எடுபடவில்லை.

‘காவலாளி திருடன்’ என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம்  ராகுலுக்கு எதிராக கூறப்பட்ட உத்தரவுகள் அந்த கட்சிக்கு பெரும் பின்னடை கடைசி 3 கட்ட தேர்தல் முடிவுகளில் ஏற்படுத்தியது.

8.

கைகொடுத்த 4 கட்டம்:  நாடு முழுவதும் 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில், முதல் 3 கட்டங்களில் தென்மாநிலங்களில் திட்டமிட்டே தமிழகம், கேரளா, ஆந்திரா,  தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காரணம், மேற்கண்ட மாநிலங்களில் பாஜவுக்கு  சொல்லும்படியாக வெற்றியை தீர்மானிக்காது என்பதால், கடைசி 4 கட்ட தேர்தல்களிலும் இந்தி பேசும் மக்களிடையே தீவிர பிரசாரம் செய்தனர்.   அதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.



9. ராகுலின் அன்பு:  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அன்பு மற்றும் சகிப்புதன்மை குறித்து பேசியது வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றாலும், அக்கட்சியின்  தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஆண்டுக்கு ₹72,000 வழங்கும் திட்டம் ஏழை மக்களிடம் வரவேற்பை பெற்றாலும், நடுத்தர மற்றும்  வரிசெலுத்துவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது, பாஜ கட்சிக்கு சாதகமாக அமைந்தது.

10.

தேசிய பாதுகாப்பு:  தேசிய பாதுகாப்பு சட்டம் வாபஸ், ஜம்மு காஷ்மீர் விவகாரம் போன்ற விவகாரங்களில், காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை வேறாக இருந்ததால், அது  அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கட்சிக்குள்ளும் 2ம் கட்ட தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளும் அறிக்கைகளும் பிரச்னையை  ஏற்படுத்தின.

குறிப்பாக சீக்கியர் விவகாரம், மோடியின் தனிப்பட்ட விமர்சனங்கள், பாஜவுக்கு சாதகமாக அமைந்தன.

11.

மம்தாவுக்கு குறி: மோடி - அமித் ஷா ஆகிய இருவரும், பீகாரில் அம்மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை கூட்டணியில் இழுத்து போட்டது, உத்தரபிரதேசத்தில்  உடன்படாத கூட்டணியை உருவாக்கிய மாயாவதி - அகிலேஷ் கூட்டணியின் பலவீனம், மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் பலவீனமாக இருக்கும்  நிலையில், அங்கு தனியாளாக இருந்து போராடிய மம்தாவை குறிவைத்து பிரசாரம் செய்து குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றினர். அதேபோல்,  ஒடிசாவில் காங்கிரசுக்கு பலம் இல்லாத நிலையில், அங்கு பிஜூ ஜனதா தளத்துக்கு எதிராக களம் இறங்கி குறிப்பிட்ட இடங்களை பெற்றனர்.



12. தமிழகத்தில் இல்லை: கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளதற்கு, கேரளாவில் ஐயப்பன் கோவில் விவகாரம்  கைகொடுக்கும் என்று பாஜ எதிர்பார்த்தது.

ஆனால், அது நடக்கவில்லை. ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிட்டது காங்கிரசுக்கு பலமாக இருந்தது.   அங்கு ஆளும் இடதுசாரிக்கு எதிராகவும் முடிவுகள் அமைந்தன.

தமிழகத்தில் பாஜவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதால், அங்கும் காலூன்ற  முடியவில்லை. பஞ்சாப்பில் மட்டுமே ஆளும் காங்கிரஸ் சில இடங்களை பெற்றுக் கொடுத்துள்ளது.



13. பிரியங்கா பிரசாரம்: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதி தேர்தல் பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டார்.

அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டிகள் நிலவிய நிலையில், பிரியங்கா களம் இறக்கப்பட்டது, காங்கிரசுக்கு அதிக வாக்குகளைப்  பெற்றுத் தரும் என ராகுல்காந்தி கருதினார். அதன்படியே, பிரியங்காவும் மாநிலம் முழுக்க சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார்.

அவர் சென்ற  இடங்களில் கூட்டம் திரண்டது. ஆனால் அது வாக்குகளாக மாறவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.



14. ஓட்டு இயந்திரம் சந்தேகம்:  எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரம் ெதாடரப்பட்ட வழக்குகள், சந்ேதகங்கள், அதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில், நீதிமன்ற உத்தரவுகள்  போன்றவை எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தின.

ேதர்தல் நேரத்தில் இதுபோன்ற பிரச்னைகளை கிளப்பியதால் அவை அவர்களுக்கு சாதகமாக  மாறவில்லை. இந்த விசயத்தில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பலமான பின்னடைவை சந்தித்தனர்.



15. வட மாநில மக்கள்:  பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் பாதிப்பு என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினாலும் கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் அவற்றை மறந்து விட்டனர்  என்றே கூற வேண்டும்.

கூட்டணி ஆட்சியில் எதுவும் சாதிக்க முடியாது என்று நினைத்துதான் மக்கள் சிந்தாமல் சிதறாமல் பாஜவிற்கு மீண்டும்  பெரும்பான்மை கிடைக்கும் அளவிற்கு வாக்களித்துள்ளனர். நிலையான ஆட்சி வேண்டும்.

வலிமையான தலைவரால் மட்டுமே அதை தரமுடியும் என்று  நம்பி மக்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர்.

குறிப்பாக வடமாநில மக்கள், அதிக நம்பிக்கையுடன் பாஜவுக்கு வாக்களித்தால், மீண்டும் பாஜ வெற்றியை  பெற்றுள்ளது.

.

மூலக்கதை