தனிப்பெரும்பான்மையுடன் பாஜ 304 இடங்களை கைப்பற்றியது மே 30ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
தனிப்பெரும்பான்மையுடன் பாஜ 304 இடங்களை கைப்பற்றியது மே 30ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பு?

16வது நாடாளுமன்ற மக்களவை இன்று மாலை கலைப்பு
மே 28ல் வாரணாசியில் பிரமாண்ட பேரணி

புதுடெல்லி: தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி 304 இடங்களை கைப்பற்றிய நிலையில், வருகிற 30ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க  உள்ளார். முன்னதாக 16வது நாடாளுமன்ற மக்களவை இன்று மாலை கலைக்கப்படுகிறது.

இதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.   முன்னதாக வாரணாசியில் மே 28ல் பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உண்டா? என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்திய ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து  கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக 2வது முறையாக நரேந்திர மோடி (68) வரும் 30ம் தேதி பதவியேற்கிறார்.   தனிபெரும்பான்மை பலத்துடன், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவஹர்லால் நேரு, இந்திரா  காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெறுகிறார்.

இத்தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

நாடாளுமன்ற மக்களவையின் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று நாடு முழுவதும்  எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகளும், அதற்கடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.   முன்னதாக வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் (விவிபேட்) சரிபார்த்தல் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை தேர்தல் ஆணையம் சரியாக கையாண்டதால், எவ்வித  குழப்பமும் இன்றி வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றன.

வழக்கமான நேரத்தைக் காட்டிலும் நேற்று நள்ளிரவுக்கு பின்னரே அதிகாரப்பூர்வ முடிவுகள்  சில தொகுதிகளில் அறிவிக்கப்பட்டன.   இன்றைய முற்பகல் நிலவரப்படி பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி ெபற்றும் முன்னிலை வகித்தும் உள்ளது. பாஜ தனித்து 304  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 83 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில்,  காங்கிரஸ் மட்டும் 53 இடங்களை வென்றுள்ளது. மாநில கட்சிகள் என்று பார்த்தால் அதிக இடங்களை கைப்பற்றிய 3வது பெரிய கட்சியாக திமுக  உள்ளது.

பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித் ஷா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங்  போன்ற தலைவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றியும், அமேதியில் தோல்வியும்  அடைந்தார்.   இந்நிலையில், 17வது நாடாளுமன்ற மக்களவைக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாஜ கட்சி, முறைப்படி பிரதமராக மோடியை  தேர்வு செய்யவுள்ளது.

முன்னதாக அமைச்சரவை கூட்டம், 16வது நாடாளுமன்ற மக்களவை கலைப்பு, பாஜ எம்பிக்கள் பிரதமரை தேர்வு செய்தல், புதிய  அமைச்சரவை குறித்த ஆலோசனை, குடியரசு தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரல், தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரும்  ேதர்தலில் வெற்றி பெற்ற கட்சி விபரத்தை  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்தல், அதன் பின் பிரதமராக மோடி பதவியேற்பு  அறிவிப்பு மற்றும் விழா ஆகிய சம்பிரதாய நடவடிக்கைகள் அடுத்தடுத்த நாட்களில் நடக்கவுள்ளன.

அதன்படி, இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

16வது நாடாளுமன்ற மக்களவைக்கான காலாவதி நாள் ஜூன் 3ம் தேதி என்பதால்,  அதற்கு முன்பாக புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். அதையடுத்து, இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16வது நாடாளுமன்ற  மக்களவையை கலைப்பது தொடர்பாக பரிந்துரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும்.

அதன்பின் முறையான  அறிவிப்புக்கு பின், புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் ெதாடங்கும்.
இதற்கிடையே, 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான விபரங்களுடன், புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பட்டியலை  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 3 தேர்தல் ஆணையர்களும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று  மாலையோ அல்லது நாளையோ சந்தித்து அளிக்க உள்ளனர்.

மேற்கண்ட நடவடிக்கைகள் முடிந்தபின், மே 30ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவி  ஏற்கிறார். முன்னதாக வாரணாசியில் மே 28ல் பிரமாண்ட பேரணி நடக்கிறது.

தொடர்ந்து, புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக ஏஜென்சி  செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 2014 தேர்தல் முடிவில் பிரதமராக பதவியேற்ற மோடி, பாஜ கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், கூட்டணி கட்சிகளுடன்  இணைந்தே ஆட்சியை நடத்தினார். அதன்படி லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற எம்பிகளுக்கு அமைச்சரவையில் இடம்  கிடைத்தது.

அதேபோல், இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த  பட்டியலில், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, லோக்ஜனசக்தி போன்ற கட்சிகள் உள்ளன.

இதற்கிடையே, புதிய கட்சிகள் கூட்டணியில் இடம்ெபற  உள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

பதவியேற்பு ஹைலைட்ஸ்:

* ஜூன் 3ம் தேதியோடு 16வது நாடாளுமன்ற மக்களவை காலாவதியாகிறது.
* மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு உண்டா என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.
* 2014 பதவியேற்பில் சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

அதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பும் கலந்து கொண்டார்.
* உலக தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* கூட்டணி கட்சித் தலைவர்கள், பிரபல சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


* கடந்த முறை பதவியேற்பு விழாவை காட்டிலும், இந்த பதவியேற்பு விழாவை மிகவும் சிறப்பாக செய்ய திட்டமிடப்பட்டு வருவதால் பாதுகாப்பு  ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

ஓபிஎஸ் மகனுக்கு  மத்திய அமைச்சர் பதவி?:  கடந்த மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார். மேலும்,  அந்தக் கூட்டணியில் போட்டியிட்ட பாமகவின் அன்புமணிக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் வட மாநிலங்களில் கூட்டணியில் போட்டியிட்டவர்களுக்கு  அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி  பெறவில்லை.

கூட்டணி கட்சியினரும் வெற்றி பெறவில்லை. அதிமுகவில் போட்டியிட்ட தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி  பெற்றார்.

இதனால் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று  ஓ. பன்னீர்செல்வம் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது ஓரிரு நாளில்  தெரிந்து விடும்.

.

மூலக்கதை