அயோத்தி நில விவகாரம்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயோத்தி நில விவகாரம்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

புதுடெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழு, இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் சாசன அமர்விடம் இன்று தெரிவித்தது. இவ்வழக்கில் மத்தியஸ்தர் குழுவின் கோரிக்கையை ஏற்று வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முழு அறிக்கை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகிய அமைப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு, ‘இது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல; நிலம் தொடர்பான பிரச்னை என்றால், எளிதில் தீர்ப்பு வழங்கிவிடலாம். ஆனால், இந்து - முஸ்லிம் மதத்தினரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது.

இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக மத்தியஸ்தர் குழுவை நியமிக்கிறோம்’ என்று கூறியது. தொடர்ந்து, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எப். எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை கடந்த மார்ச் 8ம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நியமித்தது.

ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றனர். இக்குழு இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சு நடத்தி, தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி தாக்கல் செய்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். ஏ. போப்டே, எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் அயோத்தி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்தியஸ்தர் குழு கடந்த 6ம் தேதி தாக்கல் செய்த இடைக்கால அறிக்கை குறித்த சில முக்கிய விபரங்கள் தெரியவந்துள்ளன. மத்தியஸ்தர் குழு தரப்பில், ‘இருதரப்பு பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எங்களது குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் சில விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. குறிப்பாக 30,500 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சிலவற்றை மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டியுள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கையை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ‘இடைக்கால அறிக்கையை தொடர்ந்து, முழு விசாரணை அறிக்கையும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நடத்தி அதன் விபர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

.

மூலக்கதை