மக்களவை தேர்தலில் இன்னும் ஒரு கட்டமே பாக்கி: நாளை மறுநாள் 6ம் கட்ட வாக்குப்பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மக்களவை தேர்தலில் இன்னும் ஒரு கட்டமே பாக்கி: நாளை மறுநாள் 6ம் கட்ட வாக்குப்பதிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் 59 தொகுதிகளில் நடக்கிறது. அதில், 34 தொகுதிகள் ‘ரெட் அலர்ட்’ தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

போட்டியிடும் 967 வேட்பாளர்களில் 189 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இந்த தொகுதிகளில் இன்றுமாலையுடன் பிரசாரம் ஓய்வதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி 5 கட்டமாக தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. வருகிற 19ம் தேதி 7வது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை மறுநாள் (மே 12) 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மத்தியப் பிரதேசம் 8, உத்தரப் பிரதேசம் 14, டெல்லியில் 7 தொகுதிகளில் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது என்பதால், தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்று மாலை பிரசாரம் முடிந்தபிறகு தொகுதியில் வெளியூர் ஆட்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை முடிந்துள்ள 5 கட்ட தேர்தல்களில், ஆந்திரா, மேற்குவங்கம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை.

காஷ்மீர் மாநிலத்தில் கூட தேர்தல் அமைதியாகவே நடந்து வருகிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 424 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.

மேற்கு வங்கத்தை பொறுத்தவரை தம்லுக், ஜார்கிராம், மெதினிபூர், புருலியா, பங்குரா உள்ளிட்ட 8 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த 5ம் கட்டத் தேர்தலில், இம்மாநிலத்தில் பல வன்முறை சம்பவங்கள் நடந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி, ஐடிபிபி, ஆர்பிஎப், ஆர்ஏஎப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 70,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுராவில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுமார் 464 வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன.

மேற்கண்ட மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் மா. கம்யூ பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு ஆகியோர் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், ‘168 வாக்குப்பதிவு மையங்களில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்’ என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை மறுநாள் நடைபெறும் தேர்தலில் 967 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 189 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

146 பேர் மீது சீரியஸ் கிரிமினல் வழக்குகள் உள்ளன. 6 பேர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள், 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், 25 பேர் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்கள், 5 பேர் மீது கடத்தல் வழக்கு, 21 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய வழக்கு, 11 பேர் மீது சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது, போன்ற வகைகளில் கிரிமினல் வழக்குகள் உள்ளன.

பாஜ கட்சியின் 54 வேட்பாளர்களில் 26 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 46 வேட்பாளர்களில் 20 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியின் 49 வேட்பாளர்களில் 19 பேர் மீதும் மற்றும் இதர கட்சியினர் மீதும் குற்றவழக்குகள் உள்ளன. வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 59 தொகுதிகளில் 34 தொகுதிகள் ‘ரெட் அலர்ட்’ தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த 34 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தது 3க்கும் மேற்பட்டோர் சீரியஸ் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 19ம் தேதியோடு இறுதிகட்ட மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு முடிவுக்கு வருகிறது.

இதைத்தொடர்ந்து மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை