முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குறித்து அவதூறு பரப்புவது கோழைத்தனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குறித்து அவதூறு பரப்புவது கோழைத்தனம்

புதுடெல்லி: ‘மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து அவதூறான பிரசாரத்தை முன்னெடுப்பது கோழைத்தனத்தின் உச்சம்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ‘உங்கள் தந்தையை (முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி) அவரால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் வேண்டுமானால் குற்றமற்றவர் என்று கூறலாம்.

ஆனால், உண்மையில் அவர், ஊழலில் முதலிடம் பெற்றவர் என்ற பெயருடன்தான் மரணமடைந்தார்’ என்று பேசினார். இதற்கு பதிலளித்த ராகுல், ‘உங்கள் கர்மா உங்களுக்காகக் காத்திருக்கிறது.

எனது தந்தை குறித்து நீங்கள் எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உங்களுக்கு ஒருபோதும் கைகொடுக்காது. எனது ஆழ்ந்த அன்பும், அரவணைப்பும் உங்களுக்கு உண்டு’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது இத்தாலிய உறவினர்களை விடுமுறைக்கு அழைத்துச் செல்வதற்காக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலைப் பயன்படுத்தினார்’ என்று குற்றம்சாட்டினார்.

இவரது பேச்சு காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறுகையில், ‘நாட்டுக்காகப் பணியாற்றி உயிர்நீத்த தலைவர் ராஜிவ் காந்தி இறந்து பல ஆண்டுகள் ஆன பின்னர், அவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

அவர் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது கோழைத்தனத்தின் உச்சம்.

ராஜிவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று பலமுறை உளவுத்துறை எச்சரித்தபோதும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை’ என்றார்.

.

மூலக்கதை