மேற்குவங்கத்தில் பாஜ - திரிணாமுல் கோஷம் ஜெய் ஸ்ரீ ராமா? ஜெய் மா காளியா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேற்குவங்கத்தில் பாஜ  திரிணாமுல் கோஷம் ஜெய் ஸ்ரீ ராமா? ஜெய் மா காளியா?

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்ய பாஜ கட்சியினர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தையும், இதற்கு பதிலடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஜெய் மா காளி என்கிற கோஷத்தை எழுப்பி பிரசாரம் செய்து வருகின்றனர். வருகிற 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பின், புதிய மத்திய அரசை அமைப்பதற்காக வியூகங்களை மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி வகுத்து வருகிறார்.

அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜ பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பாஜ கட்சியின் வாக்கு சதவீதம் இம்மாநிலத்தில் இந்த தேர்தலில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், பிரதமர் மோடிக்கு எதிராக மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கூடுதல் வாக்குகளை பெறுவதற்காக இந்துக்களின் வாக்குகளை குறிவைத்து பாஜ தீவிர பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் மம்தா பானர்ஜியோ பாஜவின் வேலைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஜெய் மா காளி’ என்ற கோஷத்துடன் பிரசார மேடைகளில் தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் பேசிய போது, ‘பாஜவினர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கம் எழுப்பினாலே சிறையில் தள்ளுகிறார் மம்தா பானர்ஜி’ என்றார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் தான், மம்தா பானர்ஜி ஜெய் மா காளி கோஷத்தை முன்வைத்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டுகளில் பீகாரில் பாஜ தனது களத்தை விரிவுபடுத்த முயன்ற போது, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ‘மதச்சார்பின்மையா? மதவாதமா?’ என்கிற கோஷத்தை முன்வைத்தார்.

அதேபோல், பாஜவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பேசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மம்தா, ‘‘நாடு இப்போது பாசிஸ்டுகள் அரசிடம் சிக்கி உள்ளது.

மே 23ம் தேதிக்குப் பின்னர் டெல்லியை இந்த மேற்கு வங்கம் கைப்பற்றும்.

இந்த மேற்கு வங்கம் புதிய அரசாங்கத்தை மத்தியில் உருவாக்கியே தீரும்’’ என்று ஆவேசத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை