சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை!

சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம்3 தமிழர்கள் சாகசப் பயணமாக  தமிழகம்  வந்தனர்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தமிழர்களான அருணகிரி, பன்னீர்செல்வம், பாலசந்தர் ஆகிய 3 பேரும் கடந்த மார்ச் 21ஆம் தேதி அதிக திறன் கொண்டு தயாரிக்கப்பட்ட ராட்சத பைக்குகளில் சாலை வழியாக தங்களின் சாகசப் பயணத்தைத் தொடங்கினர். 

அவர்கள் சிங்கப்பூரில் தொடங்கி இலங்கை, மலேசியா, மியான்மர், தாய்லாந்து, நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்தனர்.நம் நாட்டின் 16 மாநிலங்களில் நெடுஞ்சாலை வழியாகப் பயணம் மேற்கொண்ட இந்த 3 பேரும் கேரள மாநிலத்தில் இருந்து புறப்பட்டு தமிழகம் வந்தனர்.

மாமல்லபுரம் வந்த அவர்கள் கூறியதாவது:
சிங்கப்பூரில் இருந்து மார்ச் மாதம் 21-ஆம் தேதி எங்களின் சாகசப் பயணத்தைத் தொடங்கினோம். பைக்கில் வரும் போது சில நாடுகளில் கடல் வழியாகச் செல்ல வேண்டி இருந்தது. 

இதனால் அந்தந்த நாடுகளில் உரிய அனுமதி பெற்று கப்பலில் சென்று, பின்னர் பைக்கில் பயணம் தொடர்ந்தோம். இதுவரை நாங்கள் 17 ஆயிரம் கி.மீ. தூரத்தை அதிநவீன கருவிகள் பொருத்திய ராட்சத பைக்குகளில் கடந்துள்ளது பெருமிதம் அளிக்கிறது, இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த மூன்று பேரும் மாமல்லபுரம் முழுவதும் நகர்வலம் வந்தனர். ஆங்காங்கே தங்கள் பைக்குகளை நிறுத்திவிட்டு சிற்பங்களைக் கண்டு ரசித்தனர். அப்போது நகரவாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் இந்த மூவரின் பைக்குகளையும் வேடிக்கை பார்த்தனர். அதன் பின் மூவரும்  சென்னைக்கு புறப்பட்டனர்.

மூலக்கதை