புல்வாமா தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புல்வாமா தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில்

நியூயார்க்: இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் இந்தியாவின் 10 ஆண்டு கால முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.


காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தீவிரவாத தாக்குதலில் 41 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இத்தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய  விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாமை குண்டுவீசி தகர்த்தது.

சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்மானம்  கொண்டு வந்தன. இதற்கு சீனா தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை எழுப்பி தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தது.

ஏற்கனவே, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐநாவில் இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் 4 முறை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இதுதொடர்பாக  சீனாவிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என சீன வெளியுறவுத்துறை நம்பிக்கை தெரிவித்தது.
இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 தடைக்குழு கூட்டம் நியூயார்க்கில் நடந்தது.



இதில், மசூத் அசார் விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, மசூத் அசாரை சர்வதேச  தீவிரவாதியாக அறிவிப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது.

இம்முறை சீனா தடை ஏதும் தெரிவிக்கவில்லை. சீனா தனது தடையை விலக்கிக் கொண்டதன் மூலம், உறுப்பு நாடுகளின் முழு ஒப்புதலுடன், மசூத் அசாரை சர்வதேச  தீவிரவாதியாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இத்தகவலை ஐநாவுக்கான இந்திய தூதர் சயத் அக்பருதீன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ‘‘ஐநா தடைப் பட்டியலில் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு ஆதரவாக  இருந்த அனைவருக்கும் நன்றி’’ என கூறி உள்ளார்.

இது, இந்தியாவின் சுமார் 10 ஆண்டு கால முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.

சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவித்ததையடுத்து மசூத் அசார் இனி எந்த வெளிநாட்டிற்கும் பயணம் செய்ய முடியாது. அவரது சொத்துக்கள் முடக்கப்படும்.

கடந்த 2016ல் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தீவிரவாத  தாக்குதலுக்கு மூளையாக இருந்தவன் மசூத் அசார்.

நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தீவிரவாத தாக்குதல் என இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளுக்கு மசூத் அசார் முக்கிய காரணமாக இருந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை