இலங்கையில் மீண்டும் பயங்கரம்: குண்டு வெடிப்பில் 15 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கையில் மீண்டும் பயங்கரம்: குண்டு வெடிப்பில் 15 பேர் பலி

போலீசாருடன் நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கொலை,  ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள், கொடிகள் பறிமுதல்

கொழும்பு: இலங்கையில் இன்று அதிகாலை குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகினர். மேலும், போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் ஏராளமான வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் நாடு முழுவதும் தொடர் பீதி நிலவுகிறது. இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள்  மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.   சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத  அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை  முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை சிஐடி போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.



இந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், கல்முனை அடுத்த சாய்ந்தமருது பகுதியில் போலீசார் சில வீடுகளை ேசாதனை செய்த போது, பாதுகாப்பு படை போலீசார் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், இருதரப்புக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

விடிய விடிய நடந்த துப்பாக்கிச் சண்டையில், சாய்ந்தமருது பகுதியிலிருந்து தற்கொலை படையைச் சேர்ந்த 4 பேரின் சடலங்களை போலீசார் இன்று அதிகாலை கைப்பற்றினர். அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்த தீவிரவாதிகள் தற்கொலைத்  தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த துப்பாக்கி சண்டையில் பொதுமக்களில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதேபோல், அப்பகுதியைச் சுற்றியிருந்த மற்றொரு குடியிருப்புகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து, பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் சுமித் அட்டப்பட்டு கூறுகையில், ‘‘நள்ளிரவில் சாய்ந்தமருது சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாத கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 15 பேர் பலியாகி உள்ளனர்.

வீட்டில் குண்டும் வெடித்தது. இதில், போலீசாரால் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அடங்குவர்.

நேற்றிரவு 7 மணி முதல் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த எவரும் உயிரிழக்கவில்லை’’ என்றார். ஆனால், இந்த குண்டு வெடிப்பில், 3 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் என, 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக நேற்றிரவு 7 மணி முதல் 20 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாய்ந்தமருது பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலர், கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குவியல் குவியலாக வெடிகுண்டுகள்:

போலீசாரின் தொடர் ரெய்டில், பெருமளவில் ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், ஐஎஸ் ஆதரவு கொடிகள், வெடிகுண்டு தாக்குதலுக்கு தயாராக உள்ள தீவிரவாதிகள் எடுக்கும் சபதங்கள் ஆகியவை வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு லட்சம் பால்ரஸ் குண்டுகள், 170 டெட்டனேட்டர் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவைகள் அனைத்தும் குண்டு வெடித்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. இவை, சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே, நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 4 மணி வரை இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு இருந்தது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சவலக்கடை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் மட்டும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இலங்கையில் இதுவரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு, வெடிகுண்டு கைப்பற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 3 குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

முன்னதாக அந்நாட்டின் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்பு படையினரின் அடுத்தடுத்த சோதனையால், நாடு முழுவதும் பரபரப்பு நிலவி உள்ளது. இதுகுறித்து, இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே கூறுகையில், ‘‘கொடூர தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க தவறியதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருகிறேன்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன்.

சர்வதேச நாடுகளின் உதவியுடன் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார்.

.

மூலக்கதை