359 பேர் பலியான பரபரப்பு அடங்கும் முன் இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: நீதிமன்றம் அருகே பயங்கரம்்; தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
359 பேர் பலியான பரபரப்பு அடங்கும் முன் இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: நீதிமன்றம் அருகே பயங்கரம்்; தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி

கொழும்பு: இலங்கையில் தேவாலயம், ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த சம்பவத்தில் 359 பேர் உயிரிழந்த நிலையில், நீதிமன்றம் அருகே இன்று காலையில் மேலும் ஒரு குண்டு வெடித்தது. தொடர்ந்து குண்டுகள் வெடிப்பதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் வழிபாடு நடந்த 3 கிறித்தவ தேவாலயங்கள், 3 ஒட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 45 குழந்தைகள் உள்பட 359 பேர் இறந்தனர்.

உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தேசிய தவுஹீத் ஜமா அத் என்ற அமைப்புதான் தாக்குதல் நடத்தியது என்பதையும் கண்டுபிடித்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து இலங்கையில் தொடர்ந்து பதற்றம் மற்றும் பீதி நிலவுகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 160 தீவிரவாதிகள் இலங்கையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது வரை நடத்திய தேடுதல் வேட்டையில் 16 பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர்.

இதனால் எங்கு எப்போது குண்டு வெடிக்குமோ என்ற பீதி மேலிட்டுள்ளது. மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு  விசாரணைக்கு உதவுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக பிரிட்டன் பிரதமர் திரேசா மே நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இருவரும் பேசியுதுடன், குண்டு வெடிப்பு சம்பவத்தால் இலங்கையில் ஏற்பட்ட இழப்புகளுக்கும் உயிர்ப்பலிக்கும் பிரிட்டன் பிரதமர் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். மேலும் தீவிரவாத செயல்கள் தொடர்பாக நடந்து வரும் விசாரணைக்கு பிரிட்டன் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு விசாரணைக்கு உதவும் வகையில் பிரிட்டினின் சிறப்பு குழு ஒன்று இன்று இலங்கை வர உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் கூட்டத்தையும் நடத்துகின்றார். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை இலங்கையில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையல் நிலவும் சூழ்நிலை தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரூவன் விஜிவர்தேனா நிருபர்களிடம் கூறும்போது, இலங்கையில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாக ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பெண்.   அவர்கள் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த 8 இடங்களை தேர்வு செய்து நடத்தியுள்ளனர். தற்போது இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

குண்டு வெடிப்பு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, இலங்கையில் முப்படைகள் மற்றும் போலீசாருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பொதுப் பாதுகாப்பு பிரிவு ஒழுங்குமுறை சட்டம் 12ன் கீழ், முப்படையினர், போலீசாரும், சந்தேகப்படும் நபர்களை கைது செய்வது, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சந்தேக நபர்களை கைது செய்வது, வாகன சோதனை என இலங்கயைின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது, முப்படையினர், போலீசார், ஆயுதப் படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் இலங்கை வந்துள்ளது.

இந்தநிலையில்தான் இலங்கையில் ஒரு கார் மற்றும் ஸ்கூட்டரில் குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை செயல் இழக்கச் செய்தபோது மீண்டும், மீண்டும் குண்டுகள் வெடித்தன. இதனால், குண்டு வெடிப்புகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது.

இதனால் நகரின் பல இடங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நகர் முழுவதும் சோதனையும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இலங்கையின் புறநகரான  புகோடா நகர் நீதிமன்றத்தின்  பின்பகுதியில் உள்ள வெற்றிடத்தில்  இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.   இந்த குண்டு வெடிப்பினால் யாருக்கும் காயம் இல்லை.

குண்டு வெடித்த இடத்தைச் போலீசர் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தீரவாதிகள் வைத்த குண்டு ஆங்காங்கே ஒவ்வொன்றாக வெடித்து வருகிறது. இதனால்  பொதுமக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் எத்தனை இடங்களில் குண்டு வைத்துள்ளார்கள் என்று தெரியாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளியில் நடமாடுவதற்கே அச்சத்தில் உள்ளனர்.

இதனால் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் வேறு எங்கு குண்டு வைத்துள்ளீர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை