தங்க பதக்கம் வெல்லும் வாழ்நாள் கனவு நிறைவேறியது- ஆசிய தடகள போட்டியில் வென்ற தமிழகப் பெண் கோமதி பெருமிதம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தங்க பதக்கம் வெல்லும் வாழ்நாள் கனவு நிறைவேறியது ஆசிய தடகள போட்டியில் வென்ற தமிழகப் பெண் கோமதி பெருமிதம்!

தங்கப்பதக்கம் வெல்லும் வாழ்நாள் கனவு நிறைவேறியது என்று ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப்பெண் கோமதி மாரிமுத்து கூறி உள்ளார். 

23- வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்று வருகிறது. சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஈரான், பஹ்ரைன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இதில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

அதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். 

தமிழகத்தில் திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர்  கோமதி மாரிமுத்து. இவர் இதற்கு முன் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். 

கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சர்வதேச அளவில் கலந்து கொண்ட தனது 3-வது போட்டியிலேயே கோமதி மாரிமுத்து தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தான் தங்கப்பதக்கம் வென்றது குறித்து கோமதி மாரிமுத்து கூறியதாவது:

என்னுடைய சிறிய ஊரான முடிகண்டம் தற்போது வெளியுலகிற்குத்  தெரிவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இதற்காக நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். 

தங்கப்பதக்கம் பெறும் போது தேசிய கீதம் இசைத்தனர். அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை