முதன்முறையாக பூமியைப் போன்ற அளவில் புதிய கிரகத்தை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
முதன்முறையாக பூமியைப் போன்ற அளவில் புதிய கிரகத்தை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு!

முதன்முறையாக பூமியைப் போன்று அதே அளவிலான புதிய கிரகத்தை விண்வெளிக்கு நாசா அனுப்பிய 'டெஸ்' செயற்கைக் கோள் கண்டுபிடித்து உள்ளது. 

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ‘டெஸ்’ என்ற செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. 

இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாகச் செயல்பட்டு புதிய கிரகங்களை கண்டுபிடித்து வருகிறது. இது கடந்த ஜனவரியில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்தது. 

பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, ‘எச்டி 21749 பி’ எனப்  பெயரிடப்பட்டு உள்ளது. ‘இந்த கிரகம் மிகவும் குளிர்ச்சியானது. உயிரினங்கள் வாழத் தகுதியானது’ என சொல்லப்பட்டது. இந்த நிலையில், இந்த செயற்கைக்கோள் மற்றொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. 

‘எச்டி 21749 சி’ என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியைப் போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

முதன்முறையாக பூமியின் அளவில் கிரகம் தென்பட்டுள்ளது விஞ்ஞான உலகில் பெரும் திருப்புமுனையாக கூறப்படுகிறது. கடந்த மார்ச்சில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள், பூமியை விட 20 சதவீதம் பெரியதான  ‘கே2-229 பி’ என்ற கிரகத்தை கண்டுபிடித்தனர். 

தொடர்ந்து, புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் விண்வெளி குறித்து அறியப் படாத பல்வேறு  தகவல்களும்,  இந்த ஆராய்ச்சியில் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

மூலக்கதை