டிக் டாக் செயலி வழக்கு ஏப்.24ம் தேதிக்குள் தீர்ப்பு இல்லையெனில் தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
டிக் டாக் செயலி வழக்கு ஏப்.24ம் தேதிக்குள் தீர்ப்பு இல்லையெனில் தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

புதுடெல்லி: தடையை நீக்கக் கோரி `டிக் டாக்’ நிறுவனம் தொடர்ந்த வழக்கில்  வரும் 24ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்காவிடில், அதன் மீதான தடை நீக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது.கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி, ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடுவதால்  `டிக் டாக்’ செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, கூகுள் பிளே, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து, ‘டிக் டாக்’ செயலி  நீக்கப்பட்டது. இதனை எதிர்த்து ‘டிக் டாக்’ செயலியை அறிமுகப்படுத்திய `பைட்டான்ஸ்’ என்ற சீன நிறுவனம்,  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது அந்நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ``கோடிக்கணக்கான மக்கள் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து எவ்வித நோட்டீசும்  அனுப்பாமல் விசாரணையும் நடத்தாமல் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது’’ என்று வாதிட்டார்.இதனைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனுவை ஏப்ரல் 24ம் தேதிக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில், ‘டிக் டாக்’ செயலிக்கு  விதிக்கப்பட்ட தடை தானாகவே நீங்கிவிடும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை