பயம் காட்டிய ‘தல’ தோனி: கோஹ்லி ஒப்புதல் | ஏப்ரல் 22, 2019

தினமலர்  தினமலர்
பயம் காட்டிய ‘தல’ தோனி: கோஹ்லி ஒப்புதல் | ஏப்ரல் 22, 2019

பெங்களூரு: ‘‘பரபரப்பான கடைசி ஓவரில் பயத்தை காட்டினார் தோனி. முழுத்திறமையை வெளிப்படுத்தி ரன் சேர்த்தார்,’’ என, பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறினார்.

பெங்களூருவில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் முதலில் ‘பேட்’ செய்த பெங்களூரு அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இப்போட்டியில் வாட்சன் (5), டுபிளசி (5), ரெய்னா (0) உள்ளிட்ட ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். சென்னையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ரன் தேவைப்பட்டது. உமேஷ் வீசிய இந்த ஓவரின் முதல் 5 பந்தில், ஒரு பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 24 ரன்கள் எடுத்தார் தோனி. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாகூர் (0) ‘ரன் அவுட்’ ஆக, வாய்ப்பு நழுவியது. தனிநபராக போராடிய தோனி (84) அவுட்டாகாமல் இருந்தார்.

இதுகுறித்து தோனி கூறியது: இது ஒரு நல்ல போட்டி. கடைசி பந்து வரை விறுவிறுப்பாக இருந்தது. இப்போட்டியில் எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி, பெங்களூரு அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இருப்பினும் கடைசியில் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம்.

அணியின் வெற்றிக்கு ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க வேண்டும். முன்வரிசையில் விரைவாக விக்கெட்டை பறிகொடுக்கும் பட்சத்தில், ‘மிடில்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியாக அமைகிறது. ‘டாப்–ஆர்டரில்’ களமிறங்கும் வீரர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டும். பந்தை சரியாக கணித்து ‘ஷாட்’ அடிக்க வேண்டும்.

பேட்டிங் வரிசையில் 5, 6 அல்லது 7வது இடத்தில் விளையாடுவது எளிதானதல்ல. போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப, விரைவாக ரன் சேர்க்க வேண்டும். ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்களுக்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

பெங்களூரு, சின்னசாமி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானது. கடைசி நேரத்தில் அதிக பவுண்டரி, சிக்சர் தேவைப்பட்டது. இதற்காக ஒரு சில பந்துகளில் ரன் எடுப்பதை தவிர்த்தேன்.

இவ்வாறு தோனி கூறினார்.

கோஹ்லி மகிழ்ச்சி

கோஹ்லி கூறுகையில், ‘‘ஒரு ரன் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இரண்டு முறை குறைந்த ரன்னில் தோல்வியை சந்தித்திருந்தோம். இப்போட்டியில் 19வது ஓவர் வரை எங்களது பந்துவீச்சு நன்றாக இருந்தது. கடைசி ஓவரில் தோனி, எங்கள் அனைவருக்கும் பயத்தை காட்டினார். அவரால் முடிந்த அளவுக்கு முழுத்திறமையை வெளிப்படுத்தி ரன் சேர்த்தார். கடைசி பந்தில் நான் எதிர்பார்த்தது நடந்தது,’’ என்றார்.

நம்ப முடியவில்லை: பார்த்திவ்

பெங்களூரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் கூறுகையில், ‘‘கடைசி ஓவரின் முதல் 5 பந்தில் 24 ரன் எடுத்த தோனி, கடைசி பந்தை அடிக்காமல் கோட்டைவிட்டதை நம்ப முடியவில்லை. இது, ஆச்சரியமாக இருந்தது,’’ என்றார்.

பிளமிங் ஆதரவு

தோனியின் செயல்பாடு குறித்து சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ‘‘கடைசி நேரத்தில் மூன்று முறை ரன் எடுப்பதை தவிர்த்தது குறித்து கேப்டன் தோனியிடம் கேள்வி எழுப்பமாட்டேன். ஏனெனில் இவர் போட்டியின் சூழ்நிலையை கணித்து விளையாடக்கூடியவர். நிறைய போட்டிகளில் இப்படி செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். ஆனால் இப்போட்டியில் துரதிருஷ்டவசமாக தோல்வியடைய நேரிட்டது,’’ என்றார்.

மூலக்கதை