சென்னையில் பைனல் இல்லை | ஏப்ரல் 22, 2019

தினமலர்  தினமலர்
சென்னையில் பைனல் இல்லை | ஏப்ரல் 22, 2019

 மும்பை: சென்னையில் நடக்க இருந்த 12 வது சீசன் பிரிமியர் தொடரின் பைனல், ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது.

இந்தியாவில் பிரிமியர் தொடரின் 12வது சீசன் தற்போது நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ என்ற அடிப்படையில் சென்னையில் முதல் போட்டி நடந்தது. மே 12ல் பைனல் இங்கு தான் நடக்கும் என நம்பப்பட்டது.

இதனிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ, ஜே, மற்றும் கே என மூன்று காலரிகளுக்கும் உள்ளூர் மாநகராட்சியிடம் தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) அனுமதி சான்றிதழ் வாங்கவில்லை.

கடந்த 2012ல் இருந்து இவை காலியாகத் தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறை போட்டிகள் நடக்கும் போதும் 12,000 டிக்கெட்டுகள் விற்பனை இழப்பு ஏற்படும். இதனால் சில கோடிகள் வரை வருமானம் பாதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பிரிமியர் தொடரின் தகுதிச்சுற்று 1, மற்றும் பைனல் (மே 12) சென்னையில் நடக்க இருந்தது. ஆனால் டி.என்.சி.ஏ., சார்பில் சர்ச்சைக்குரிய மூன்று காலரிகளுக்கும் அனுமதி வாங்கவில்லை.

இதனால் சென்னையில் நடக்க இருந்த பைனல், ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. மே 6, 8, 10ம் தேதிகளில் ஐதராபாத்தில் பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், தகுதிச்சுற்று 2 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் விசாகப்பட்டனத்தில் நடக்கும்.

பிரிமியர் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பெற்று ‘பிளே ஆப்’ சுற்றுக்கு சென்னை முன்னேறினால், சென்னையில் நடக்கும் தகுதிச்சுற்று 1ல் பங்கேற்கலாம்.

பி.சி.சி.ஐ., நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில்,‘‘மூன்று காலரிகளுக்கு அனுமதி வாங்காததால், பைனலை மட்டும் ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளோம்.  ‘நாக் அவுட்’ போட்டிகளின் போது டிக்கெட்டுகள் விற்பனை முக்கியம். இதை கணக்கில் கொண்டு இம்முடிவு எடுத்தோம்,’’ என்றார்.


‘மினி’ பெண்கள் தொடர்

பிரிமியர் கிரிக்கெட்டில் வரும் மே 6 முதல் 10 ம் தேதி வரை ஜெய்ப்பூரில் ‘மினி’ பெண்கள் தொடர் நடக்கவுள்ளது. இதில் சூப்பர்நோவாஸ், டிரையல்பிளேசர்ஸ் அணிகளுடன் மூன்றாவதாக இந்த ஆண்டு வெலாசிட்டி அணியும் பங்கேற்கிறது.

மூலக்கதை