‘ராசியில்லாத ராஜா’ ரகானே * வீழ்ந்தது ராஜஸ்தான் அணி | ஏப்ரல் 22, 2019

தினமலர்  தினமலர்
‘ராசியில்லாத ராஜா’ ரகானே * வீழ்ந்தது ராஜஸ்தான் அணி | ஏப்ரல் 22, 2019

ஜெய்ப்பூர்: பிரிமியர்போட்டியில் ரிஷாப் 78 ரன்கள் விளாச, டில்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரகானே சதம் அடித்த போதும் ராஜஸ்தான் வெற்றிக்கு போதவில்லை.

பிரிமியர் தொடரின் 12வது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த லீக்போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பீல்டிங் தேர்வு செய்தார்.

ரகானே அபாரம்

ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன், ரகானே ஜோடி துவக்கம் கொடுத்தது. இஷாந்த் வீசிய போட்டியின் 2வது பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் ரகானே. மறுபக்கம் சாம்சன் வீணாக ரன் அவுட்டானார். ரகானே, ஸ்மித் இணைந்தனர்.

அக்சர் படேல், ரபாடா ஓவர்களில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி என விளாசிய ரகானே வேகமாக ரன்கள் சேர்த்தார். ரூதர்போர்டு ஓவரில் ஸ்மித் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். இவர் 32 பந்தில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஸ்டோக்ஸ் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். 17 ரன்னில் இஷாந்த் தயவில் தப்பிய ரகானே, மறுபக்கம் அசத்தலை தொடர்ந்தார். இவர் பிரிமியர் அரங்கில் இரண்டாவது சதம் கடந்தார். இதற்கு முன் கடந்த 2012ல் பெங்களூருவுக்கு எதிராக சதம் விளாசி இருந்தார். பின் வந்த ஆஷ்டன் டர்னர் ‘டக்’ அவுட்டாகி திரும்பினார். ஸ்டூவர்ட் பின்னி 13 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். பராக் (4) போல்டானார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. ரகானே (105) அவுட்டாகாமல் இருந்தார்.

தவான் அரைசதம்

கடின இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்த சீசனில் முதன் முறையாக இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 50 ரன்னுக்கும் மேல் சேர்த்தது. தவான் 25வது பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 54 ரன் எடுத்த போது, கோபால் சுழலில் ‘ஸ்டம்டு’ ஆனார்.

ஸ்ரேயாஸ் (4) ஏமாற்ற, ரிஷாப் பன்ட் பவுண்டரி மழை பொழிந்தார். இவர் ஆர்ச்சர் பந்தில் சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். பிரித்வி 42 ரன் எடுத்தார். கடைசி நேரத்தில் ஆர்ச்சர், உனத்கட் பந்துகளில் சிக்சர்கள் அடித்த ரிஷாப், வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் (78 ரன், 36 பந்து), இங்ராம் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை