சோதனை தீரவில்லை! சூலூரில் தேர்தலால் தொடர்கிறது

தினமலர்  தினமலர்
சோதனை தீரவில்லை! சூலூரில் தேர்தலால் தொடர்கிறது

கோவை:சூலுார் இடைத்தேர்தல் காரணமாக, கோவை மாவட்டம் முழுவதும், வாகன சோதனையை தீவிரப்படுத்தும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,18ல் முடிந்து விட்டது. எனினும், சட்டமன்றத்தில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மே 19ல் நடக்கிறது.

இதில் கோவை மாவட்டம், சூலுார் தொகுதியும் ஒன்று.இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களில், பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும், வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்ய, கட்சியினர் முயற்சிப்பர் என்பதாலும், வாகன சோதனையை தீவிரப்படுத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, லோக்சபா தேர்தல் முடிவுக்குப்பின், மூன்று நாட்களாக கோவை மாவட்டத்தில் ஓய்ந்திருந்த வாகன சோதனை, நேற்று முழு வீச்சில் மீண்டும் துவங்கியது. மாவட்டத்தில் உள்ள, பத்து சட்டமன்ற தொகுதிகளிலும், நாளொன்றுக்கு, தலா, ஒன்பது பறக்கும் படையினர், தலா, ஒன்பது நிலையான கண்காணிப்புக்குழுவினர், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பறக்கும் படையிலும், ஒரு துணை பி.டி.ஓ., ஒரு எஸ்.ஐ., நான்கு காவலர்கள் பணியில் இருப்பர்.இது தவிர, சூலுார் தொகுதியில் மட்டும், இரு வீடியோ கண்காணிப்புக்குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் என்பதால், சூலுார் தொகுதியில் மட்டும் பறக்கும் படையினர் எண்ணிக்கையை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி நாளை முதல், கூடுதலாக மூன்று பறக்கும் படைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறக்கும் படையினர், மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்துவர்.இதில், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணம், பொருள் எதுவாக இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லையெனில், பறிமுதல் செய்வர். 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், வருமான வரித்துறையினரும் விசாரணைக்கு வருவர்.

ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ள, பறக்கும் படை வாகனங்களின் இயக்கம் முழுவதும், கோவை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம், 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களில், பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும், வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்ய, கட்சியினர் முயற்சிப்பர் என்பதாலும், வாகன சோதனையை தீவிரப்படுத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை