தொடரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்: அன்றாட பணி பாதிப்பால் மக்கள் கவலை

தினமலர்  தினமலர்
தொடரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்: அன்றாட பணி பாதிப்பால் மக்கள் கவலை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறை தொடரப்படுவதால், பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கடந்த, 18ம் தேதி நடந்தது. தேர்தல் அறிவித்ததில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது.அரசு அதிகாரிகள், அலுவலர்கள் தேர்தல் பணியிலும், பறக்கும் படையிலும் பணியாற்றியதால், அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் தேங்கின.
பல்வேறு அலுவல்களுக்காக அரசு அலுவலகங்கள் சென்ற பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், பறக்கும் படை சோதனைக்கு பயந்து, வியாபாரிகள் பணம் கொண்டு செல்வதை தவிர்த்தனர்.இதனால், பொள்ளாச்சியின் உயிர் நாடியான தேங்காய் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்கள் முடங்கின.தேர்தல் முடிந்தவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்பதால், கடந்த, 19ம் தேதி முதல் இயல்பு வாழ்க்கை திரும்பும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், கோவை மாவட்டத்தில் சூலுார் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்; பறக்கும் படை சோதனை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஏற்கனவே, ஒரு மாதம் தொழில்கள் முடங்கி, பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாதம் இதே நிலை நீடிக்கும் என்பது அனைத்து தரப்பினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து, மாணவர்கள் பல்வேறு சான்றிதழ்களுக்காக அரசு அலுவலகங்களை எதிர்பார்த்து உள்ளனர்.இந்நிலையில், அதிகாரிகள் தேர்தல் பணிகள், பறக்கும் படை பணிகளின் தொடர்வதால், சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மூலக்கதை