புலி சிற்பத்தில் கல்வெட்டு கண்டுபிடிப்பு:: தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தகவல்

தினமலர்  தினமலர்
புலி சிற்பத்தில் கல்வெட்டு கண்டுபிடிப்பு:: தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தகவல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, புலி சிற்ப கல்லில் உள்ள கல்வெட்டினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே தேவனுார்புதுாரில், நவக்கரை பாலம் அருகில் நரிகடிச்சான் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், புலியைக் குத்திக் கொல்லும் வீரன் ஒருவனின் சிற்பத்தை வைத்து இப்பகுதி மக்கள் வணங்குகின்றனர்.வேப்ப மரத்தின் அருகில் அமைந்துள்ள கோவிலில், ஆறடி நீளமும், ஐந்தடி அகலமும் கொண்ட ஒரு சிறிய கருவறை அமைப்பு உள்ளது.
இங்கு, புலியைத் தாக்கிக் கொல்லும் வீரனின் உருவம் பொறித்த, 'புலி குத்தி -நடுகல்' உள்ளது. கோவிலில், கோவையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் குமரவேல், சுதாகர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் ஆகியோர், புலி சிற்பத்தில் இருக்கும் எழுத்துகளை ஆய்வு செய்தார்.புலிச்சிற்பத்தின் மீது பல ஆண்டுகளாக எண்ணெய் பூசப்பட்டதால், நீண்ட முயற்சிக்குப் பின் எண்ணெய் பிசுபிசுப்பு அகற்றப்பட்டு, எழுத்துகள் உள்ள பரப்பின் மீது மாவு பூசி எழுத்துகள் படிக்கப்பட்டன.
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது:கோவை, பொள்ளாச்சி, உடுமலைப் பகுதிகளில் நிறைய இடங்களில் உள்ள, 'புலி குத்திச் சிற்பங்கள்' தொல்லியல் பார்வையில், 'நடுகற்கள்' என்று கூறப்படும்.போர் வீரர்களுக்கும், கால்நடைகளை எதிரி வீரர்களிடமிருந்தும், புலி போன்ற கொடிய விலங்குகளிடமிருந்தும் காத்துச் சண்டையிடுகின்ற வீரர்களுக்கும் நடுகல் என்னும் நினைவுக்கற்கள் எழுப்பி மக்கள் வழிபடுதல் சங்க காலம் முதல் உள்ள மரபாகும்.
அவ்வகையில், தேவனுார்புதுார் நடுகல், 'நரிகடிச்சான் கோவில்' என்றும், 'மாலக்கோவில் என்றும் பெயரிட்டு வழிபடுகின்றனர். தாத்தய்யன் கோவில் என்றும் குறிப்பிடுகின்றனர்.இங்கு புலிக்குத்திக்கல் பற்றிய ஆய்வு, சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. கோவையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் குமரவேல், சுதாகர் ஆகியோர் இப்பகுதியில் தொல்லியல் தடயங்களைக் காணும் கள ஆய்வுப் பயணத்தின்போது, கோவிலில் உள்ள புலிச் சிற்பத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருப்பதை தெரிவித்தனர்.
அங்கு ஆய்வு செய்த போது, கல்வெட்டு எட்டு வரிகள் கொண்டதாக இருந்தது. முதல் வரியில், சார்வரி வருடம் ஆனி மாதம் என்று எழுதப்பட்டுள்ளது.புலியைக் கொன்ற வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் வழிபாடு, காலப்போக்கில் மாலக்கோவில் வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட மக்கள், தம் கால்நடைச் செல்வம் நோயின்றிப் பெருக வேண்டும், என்ற கருத்தால் கோவில்களை எழுப்பி வழிபடும் மரபு கொங்குப்பகுதியில் உள்ளது.கோவிலுக்கு உபையமாகப் புலியின் சிற்பத்தை இப்பகுதியைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் வழங்கியதாக கல்வெட்டு தெரிவிக்கிறது.கல்வெட்டில் உள்ள 'சார்வரி' என்னும் தமிழ் ஆண்டைக் கொண்டும், எழுத்துகளை கொண்டும், கல்வெட்டு எழுதப்பட்ட ஆண்டு கி.பி. 1900ம் ஆண்டாகும்.நடுகல் சிற்பம் (புலி குத்திக்கல் சிற்பம்), கல்வெட்டு எழுதப்பட்ட காலத்துக்கும் பழமையானது என்பதில் ஐயமில்லை. நடுகல்சிற்பத்தின் காலம் கி.பி. 18- ஆம் நுாற்றாண்டாகும்.முல்லை நிலக்கடவுளான '
மால்' என்றும் 'மாயோன்' என்றும் பெயர் இடம் பெற்றுள்ளதால், மாலக்கோவில் எனப்பெயர் வர காரணமாக அமைந்துள்ளது.கால்நடை வளர்க்கும் மக்கள் தம் கடவுளாக 'மால்' என்னும் ஆயர்பாடிக் கண்ணனை வழிபடுவர். 'மால் கோவில்' என்னும் பெயரே காலப்போக்கில் மருவி 'மாலக்கோவில்' என்றானது.மக்கள் இந்த நடுகல் சின்னத்தைக் கோவிலாக வழிபடுவதால் பல நுாற்றாண்டுகளைக் கடந்த தொல்லியல் தடயமான நடுகல், அழிவில் இருந்து காக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு, தெரிவித்தார்.

மூலக்கதை