சுற்றுலா! நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு

தினமலர்  தினமலர்
சுற்றுலா! நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு

ஒரு மாதத்துக்கும் மேலாக, வறுத்தெடுக்கும் வெயிலில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் குஷிப்படுத்தும் வகையில் சுற்றுலா அழைத்து செல்வதற்கு, அரசியல் கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை, கடந்த மார்ச் 10ம் தேதியன்று, தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு தொற்றி கொண்டது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை படுவேகமாக துவக்கினர்.இதன் தொடர்ச்சியாக, வேட்பு மனு தாக்கல் தொடர்பான பணிகளில் பிசியாக இருந்தனர். இறுதி வேட்பாளர்கள் பட்டியல், கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, அனல் பறக்கும் பிரசாரம் துவங்கியது.புதுச்சேரியில் கோடை வெயில் சதம் அடித்ததால், வறுத்தெடுக்கும் அளவுக்கு அனல் வீசியது. வெயிலை பற்றி கவலைப்படாமல், அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். திறந்த ஜீப்பில் வேட்பாளர்களுடன் தலைவர்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டனர். அவர்களுடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு சென்றனர்.எம்.எல்.ஏ.,க்களும், கட்சிகளின் முன்னணி நிர்வாகிகளும் தங்களது தொகுதியில் செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால், வேகாத வெயிலில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். தங்களுடன் அந்தந்த பகுதியை சேர்ந்த நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அழைத்து சென்றனர்
.மேலும், முக்கிய தலைவர்கள் வருகையின்போது, தெருமுனை பிரசார கூட்டம், பொதுக் கூட்டம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு கூட்டம் சேர்ப்பதற்குள் கட்சி நிர்வாகிகளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. வெயிலில் அலைந்து திரிந்து கூட்டம் சேர்த்தனர்.பிரசாரம் முடிவடைந்த தினத்தன்று, ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது பலத்தை வெளிக்காட்டும் வகையில், டூ வீலர் பேரணி நடத்தினர். ஒவ்வொரு கட்சியிலும் நடத்தப்பட்ட பேரணியில் திரளான தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்று பல மணி நேரம் வெயிலில் சுற்றினர்.ஓட்டுப் பதிவு அமைதியாக முடிந்து விட்டதால், அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் நிம்மதி பெருமூச்சுடன், ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு மாதத்துக்கும் மேலாக தங்களுடன் உழைத்து களைத்த நிர்வாகிகளையும், தொண்டர் களையும் குஷிப்படுத்தும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
-நமது நிருபர்-

மூலக்கதை