இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு: உளவுத்துறை கடிதத்தின் அடிப்படையில் 24 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு: உளவுத்துறை கடிதத்தின் அடிப்படையில் 24 பேர் கைது

கொழும்பு: இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட  சம்பவத்தில் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ள நிலையில், ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பு மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. உளவுத்துறை கடிதத்தின் அடிப்படையில் 24 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது கோச்சிகடே புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் ஹோட்டல், தேகிவாலா மிருககாட்சி சாலை, மகாவில்லா கார்டன் வீடு என 8 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவத்ததில் பலியானோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 35 வெளிநாட்டினர் அடங்குவர்.

மேலும், 500க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அதிபர் சிறிசேனா, ‘இலங்கை மக்கள் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.

இலங்கை குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார். அசம்பாவிதங்களை தவிர்க்க, சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ் ஆப், டுவிட்டர் போன்றவற்றை முடக்கவும்,  வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ராணுவத்தை தெற்கு பகுதிக்கு செல்லுமாறு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் முகமது தாயிம் முகமது சஹரானின் தலைமையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது’ என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படியே, இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடிதம் குறித்த சந்தேக நபர்களின் முழுமையான தகவல்களும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு, இலங்கை தேசிய பாதுகாப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாக்குதலை திட்டமிட்ட சந்தேக நபர், சமூக வலைதளங்களின் ஊடாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும், புலனாய்வு பிரிவின் தகவல்களை மேற்கோள்காட்டுகின்றன.

வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 50க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சந்தேகபடும் வகையில், தம்புள்ளை பகுதியில் நேற்றிரவு பலரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் காத்தான்குடி மற்றும் மாவனெல்லை பகுதிகளை சேர்ந்தவராவர்.

 பயங்கர வெடிகுண்டு  தாக்குதலை தொடர்ந்து, நேற்று அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியுடன் இந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதாக போலீஸ் ஊடக போலீஸ் அதிகாரி அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதன்படி, இன்று காலை முதல் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

இருந்தாலும், இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் நேற்றே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போப் ஆண்டவர் இரங்கல்: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போப் ஆண்டவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புத்த கயாவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்துக்கு போப் ஆண்டவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனித பீட்டர் சதுக்கத்தில் ஆசி வழங்கினார். அதன் நிறைவில், இலங்கை குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த அவர், பலியானோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இலங்கையில் பிரார்த்தனைக்காக கூடியிருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எனது நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். கொடிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

பலியான அனைவரையும் இறைவனிடம் ஒப்படைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.   இதேபோல், பீகார் மாநிலத்தின் புத்த கயாவில், இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் இன்று நடந்தன. இதில், ஏராளமான புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர்.



விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு சிக்கியது: கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது செயலிழக்கச் செய்யப்பட்டது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொழும்புவின்  கட்டுநாயக்க விமான நிலையம் அருகே போலீசார் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.



அதனை மீட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் தங்களின் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் விமான நிலையத்திலே தங்கியுள்ளனர்.

தற்போது, விமான நிலையத்தின் அருகிலேயே சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டதால், விமான நிலையத்தில் முடங்கியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.



சதிகாரன் புகைப்படம் வெளியீடு

இலங்கை தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடத்திய சதிகாரனின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு, கட்டுபிட்டிய தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சிங்கள மீடியா ஒன்று குண்டுவெடிப்பு நடத்தியவர் இவரா? என குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர் கட்டுப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிகுண்டு வெடிக்க வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த நபரிடம் இருக்கும் பையில் அவர் வெடிகுண்டை வைத்து கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள நபர் மனித வெடி குண்டாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.


.

மூலக்கதை